ஈரோட்டில் கறிக்கோழி இறைச்சி விலை உயர்வு; கிலோ ரூ.260-க்கு விற்பனை

ஈரோட்டில், கறிக்கோழி இறைச்சி விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.260-க்கு விற்பனை ஆனது.

Update: 2023-06-10 21:40 GMT

ஈரோட்டில், கறிக்கோழி இறைச்சி விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.260-க்கு விற்பனை ஆனது.

கறிக்கோழி இறைச்சி

தமிழகத்தில் தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. இதனால் ஈரோட்டுக்கு மீன்கள் வரத்து குறைந்து விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக அசைவ பிரியர்கள் இறைச்சி கடைகளுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். நாட்டுக்கோழி இறைச்சி மற்றும் ஆட்டு இறைச்சி விலை அதிகமாக இருப்பதால், கறிக்கோழி இறைச்சி பக்கம் அசைவ பிரியர்களின் கவனம் திரும்பி உள்ளது.

இதன் காரணமாக கறிக்கோழி இறைச்சி தேவை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் தற்போது வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளதால் கறிக்கோழி இறைச்சி உற்பத்தி பாதிக்கப்பட்டு விலை உயரத்தொடங்கி உள்ளது. ஈரோட்டில் கடந்த 1-ந்தேதி ரூ.220-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கறிக்கோழி இறைச்சி தற்போது ரூ.260-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அசைவ பிரியர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இதேபோல் நாட்டுக்கோழி இறைச்சி மற்றும் ஆட்டு இறைச்சி ஒரு கிலோ ரூ.740-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

30 டன் விற்பனை

இதுகுறித்து ஈரோடு கறிக்கோழி மொத்த விற்பனையாளர் சங்க தலைவர் பரமசிவம் கூறியதாவது:-

ஈரோடு மாநகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கறிக்கோழி இறைச்சி கடைகள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு தினந்தோறும் 5 டன் முதல் 10 டன் வரை கறிக்கோழி இறைச்சி விற்பனை நடக்கிறது. அதே நேரத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் 25 டன் முதல் 30 டன் வரை கறிக்கோழி இறைச்சி விற்பனை ஆகிறது.

ஈரோடு மாவட்டத்துக்கு ஈரோட்டில் உள்ள பண்ணைகளில் இருந்தும், பழனி, திண்டுக்கல், பொள்ளாச்சி, உடுமலைபேட்டை, காஞ்சிக்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் கறிக்கோழிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

உற்பத்தி குறைவு

பொதுவாக கறிக்கோழி விலை 2 காரணங்களால் உயரும். ஒன்று செயற்கையான முறை மற்றொன்று இயற்கையான முறை. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் இயற்கையான முறையில் கறிக்கோழி இறைச்சி உற்பத்தி குறைந்துள்ளது.

தற்போது கோழிகள் தீவனம் சரியாக சாப்பிடாததால் அதிக அளவில் இறந்து விடுகின்றன. மேலும் எடையும் குறைவாக உள்ளது. மழை காலங்களில் ஒரு கோழி 3 முதல் 3½ கிலோ வரை எடை இருக்கும். ஆனால் தற்போது 2 முதல் 2½ கிலோ வரை தான் எடை இருக்கிறது. மழைக்காலம் தொடங்கினால் கறிக்கோழி இறைச்சி உற்பத்தி அதிகரித்து விலை குறையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்