செஸ் ஒலிம்பியாட் போட்டி: மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

Update: 2022-08-01 09:41 GMT

மக்கள் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் நகரம் சர்வதேச அளவில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக திகழ்வதால் நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நடந்து வரும் நிலையில் அலங்கார சிற்பத்தூண் திறக்கப்பட்டுள்ளது. புறவழிச்சாலை பஸ் நிலையம் கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை நேரில் பார்த்து ரசித்த சுற்றுலா பயணிகள் புராதன சின்னங்களை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர். ரம்மியமான சூழலை அனுபவிப்பதற்காக சுற்றுலா வந்த பயணிகளின் கூட்டத்தால் கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல் போன்ற புராதன பகுதிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்பட்டது.

முன் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே...

மேலும் நேற்று சுற்றுலா வந்த பயணிகளில் பலர் நுழைவு சீட்டு வாங்கி செஸ் போட்டியை காணும் ஆவலில் போட்டி நடைபெறும் பூஞ்சேரி நட்சத்திர ஓட்டல் வளாக பகுதிக்கு சென்றனர். ஆனால் அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் இணையதளம் மூலம் முன் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே செஸ் போட்டியை காண உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். இதைடுத்து, போட்டியை நேரில் காண வந்த பயணிகள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர். மீண்டும் மாமல்லபுரம் சென்று கடலில் குளித்து மகிழ்ந்ததை காண முடிந்தது. செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண சர்வதேச நாடுகளில் இருந்து வந்திருந்த ரசிகர்கள் பலரும் செஸ் போட்டி தொடங்கும் நேரம் மாலை 3 மணி என்பதால் காலை நேரத்தில் பொழுதை கழிப்பதற்காக புராதன சின்னங்களை சுற்றி பார்க்க வந்திருந்ததை காண முடிந்தது.

போக்குவரத்து நெரிசல்

அவர்களில் பலர் பல்லவர்கள் கால சிற்பங்கள் முன்பு புகைப்படம் எடுத்து மகிழ்ந்ததை காண முடிந்தது. மாமல்லபுரம் புராதன சின்னங்களில் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகையால் நேற்று கடற்கரை சாலை, ஐந்துரதம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் வியாபாரம் களைகட்டியது.

சுற்றுலா வாகனங்களால் மாமல்லபுரத்தில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. கிழக்கு ராஜ வீதி, மேற்கு ராஜ வீதி, கடற்கரை சாலை பகுதியில் கடும் நெரிசலில் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மெதுவாக ஊர்ந்து சென்றன. இதனால் சாலையில் சென்ற வாகனங்களை நெரிசலில் சிக்கிவிடாமல் இருக்க மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் மேற்பார்வையில், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் தலைமையில் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்