அரசு உதவி பெறும் பள்ளி- தனியார் பள்ளி மாணவர்களுக்கு இடையே செஸ் போட்டி
அரசு உதவி பெறும் பள்ளி- தனியார் பள்ளி மாணவர்களுக்கு இடையே செஸ் போட்டி
திருவாரூரில் அரசு உதவி பெறும் பள்ளி- தனியார் பள்ளி மாணவர்களுக்கு இடையே நடந்த செஸ் போட்டியை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
செஸ் போட்டி
செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு திருவாரூர் நியூ பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான செஸ் போட்டியினை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சென்ைன மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 10-ந் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. இப்போட்டி குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மாவட்ட அளவில் பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளை சேர்ந்த 200 மாணவ-மாணவிகளுக்கிடையேயான மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
மாறுவேட போட்டி
அதனை தொடர்ந்து பள்ளியில் எல்.கே.ஜி. முதல் இரண்டாம் வகுப்பு வரையிலான 32 குழந்தைகள் கலந்து கொண்ட சதுரங்கம் விளையாட்டு குறித்த மாறுவேட போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன், மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகுவேந்தன், சதுரங்க கழக துணைத்தலைவர் முரளிதரன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெயச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.