சென்னையில் சர்வதேச புத்தகக்காட்சி, ஜனவரி 6 முதல் 22-ந் தேதி வரை நடக்கிறது; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் சென்னை சர்வதேச புத்தகக்காட்சி ஜனவரி 6-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெறுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தகக்காட்சியை தொடங்கி வைக்கிறார்.

Update: 2022-12-26 21:31 GMT

46-வது புத்தகக்காட்சி

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) தலைவர் எஸ்.வயிரவன், செயலாளர் எஸ்.கே.முருகன் ஆகியோர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 46-வது சென்னை சர்வதேச புத்தகக்காட்சியானது வருகிற ஜனவரி 6-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 6-ந் தேதி மாலை 5.30 மணிக்கு தொடங்கி வைக்கிறார். விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் கலந்து கொள்கிறார்.

தமிழக அரசின் ஆதரவுடன் ஜனவரி 16-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 3 நாட்கள் அதே வளாகத்தில் சென்னை சர்வதேச புத்தகக்காட்சி நடைபெறுகிறது. இதில் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பதிப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த புத்தகக்காட்சியையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

புத்தகக்காட்சிக்கு 800 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் 3 நாட்கள் நடைபெறும் சர்வதேச புத்தகக்காட்சிக்கு என 30 குளிரூட்டப்பட்ட அரங்குகள் தனியாக ஒதுக்கப்பட்டு உள்ளன. இதுதவிர சிறிய அளவில் புத்தகங்களை வெளியிடும் பதிப்பாளர்களுக்காக மினி அரங்குகளும், திருநங்கை பதிப்பாளர்களுக்கு என சிறப்பு அரங்கும் அமைக்கப்பட்டு உள்ளன. புத்தகக் காட்சியானது தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.

மு.கருணாநிதி பொற்கிழி விருது

தமிழக அரசின் பாடநூல் நிறுவனம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மத்திய அரசின் சாகித்ய அகாடமி, நேஷனல் புக் டிரஸ்ட், பப்ளிகேஷன் டிவிஷன், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இதுதவிர சர்வதேச நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் புத்தகக்காட்சியில் கலந்து கொள்கின்றனர்.

புத்தகக் காட்சியின் தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 6 பேருக்கு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருதுகளையும், தலா ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்க இருக்கிறார். மேலும், பபாசி வழங்கும் சிறப்பு விருதுகளையும் (தலா ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசு) வழங்கி சிறப்பிக்க இருக்கிறார். 2023-ம் ஆண்டுக்கான முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருதாளர்கள், பபாசி வழங்கும் சிறப்பு விருதாளர்களின் பெயர்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

ஊருக்கு சென்று வருபவர்களுக்காக...

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலான வாசகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். கடந்த ஆண்டு பொங்கல் வரை நடத்தப்பட்ட புத்தகக் காட்சியானது, இந்த ஆண்டு பொங்கலுக்கு சொந்த ஊருக்கு சென்று வருபவர்களும் பயன்பெறும் வகையில் ஜனவரி 22-ந் தேதி வரை நடத்தப்படுகிறது. புத்தகக்காட்சியின் நிறைவு விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன் கலந்து கொள்கிறார்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பேட்டியின்போது, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் துணைத்தலைவர் பெ.மயிலவேலன், பொருளாளர் அ.குமரன், துணை இணைச் செயலாளர் எஸ்.சுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர் நந்த கிஷோர் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்