சென்னை ஸ்டான்லி, தர்மபுரி மருத்துவ கல்லூரிகள் தொடர்ந்து செயல்பட அனுமதி -அமைச்சர் தகவல்

சென்னை ஸ்டான்லி, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகவில்லை என்றும், தொடர்ந்து செயல்பட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Update: 2023-06-09 00:14 GMT

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டு, பொது மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டு அறிந்தார்.

அதனைத்தொடர்ந்து சென்னை கிண்டியில் கட்டப்பட்டு திறப்பதற்கு தயாராக உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையையும் ஆய்வு செய்தார். அப்போது அவருடன் பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலுவும் சென்றார்.

முன்னதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மருத்துவ இடங்களுக்கு பொது கலந்தாய்வு நடத்தப்படும் என்ற வரைவு மத்திய அரசால் கடந்த மாதம் அனுப்பப்பட்டது. இதுதொடர்பாக உடனடியாக முதல்-அமைச்சரின் ஆலோசனையை பெற்று, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயலாளர் மூலம் மத்திய அரசுக்கு ஆட்சேபனை கடிதம் அனுப்பப்பட்டது.

மாநில அரசுகளே நடத்தலாம்

அந்த கடிதத்தில், 'மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலன்கருதி, மருத்துவம் மற்றும் பல் மருத்துவ சேர்க்கைகள் தொடர்பான கொள்கைகள் மற்றும் விதிமுறைகள் மீது சட்டம் இயற்றுவது என்பது மாநிலத்தின் உரிமைகளை சார்ந்தது. எனவே பொது கலந்தாய்வு என்பது ஒரு சட்டமீறல் ஆகும்.

எதிர்காலத்தில் சட்டம் இயற்றும் மாநில அரசின் திறனை இது தடுக்கும். மேலும் பின்தங்கிய மக்களுக்கு ஆதரவை வழங்குவதற்கு சிந்திக்கப்படும் எந்தவொரு சமூக பொருளாதார நடவடிக்கைகளுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என்று தமிழ்நாடு அரசின் சார்பில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

அதன்படி மத்திய அரசு பொது கலந்தாய்வு இல்லை எனவும், மாநில அரசுகளே கலந்தாய்வு நடத்தி கொள்ளலாம் என்று பதில் அனுப்பி இருக்கிறார்கள். முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி, இன்றைக்கு மாநில உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, மாநில உரிமைகள் மீதான பாதிப்புகளில் இருந்தும் விடிவு கிடைத்திருக்கிறது. முதல்-அமைச்சர் எடுத்த இந்த முயற்சிக்கு மருத்துவத்துறையை சார்ந்த மாணவ சமுதாயம் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறது.

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி

அதோடு கடந்த 15 நாட்களுக்கு முன்னர் தேசிய மருத்துவ ஆணையம் தமிழ்நாட்டில் இருக்கின்ற மருத்துவ கல்லூரிகளை ஆய்வு செய்து அதில் கண்காணிப்பு கேமரா, 'பயோமெட்ரிக்' போன்ற சிறிய அளவிலான குறைபாடுகள் இருப்பதை கண்டறிந்து சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, திருச்சி மற்றும் தர்மபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவது தொடர்பான நோட்டீசை அனுப்பியிருந்தார்கள்.

நமது துறையின் செயலாளர், மருத்துவக்கல்வி இயக்குநர் அடங்கிய குழுவை டெல்லிக்கு அனுப்பி அதுதொடர்பாக விளக்கம் தெரிவிக்கப்பட்டது. தற்போது கோடை காலம் என்பதால் டாக்டர்கள் அவர்களுக்கென்று இருக்கின்ற விடுமுறைகளை பயன்படுத்தி வெளியில் செல்வது வழக்கம். எனவே இதற்காக ஒரு கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்வது சரியாக இருக்காது' என்று அதில் விளக்கமளிக்கப்பட்டது.

தொடர்ந்து செயல்பட அனுமதி

மேலும் தேசிய மருத்துவ ஆணையக்குழு கடந்த 2 நாட்களாக சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி, தர்மபுரி மருத்துவ கல்லூரிகளில் நேரடியாகவும், காணொலி மூலமும் ஆய்வும் செய்தனர். இதன்மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும்,

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரிக்கும் அவர்கள் அனுப்பிய நோட்டீசுகள் திரும்ப பெற்றுக் கொண்டு, இக்கல்லூரிகளின் அங்கீகாரம் மேலும் 5 ஆண்டுகள் நீடிப்பதற்கு தடை இல்லை என்று அறிவித்து இருக்கிறார்கள்.

அதற்கான எழுத்துப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரும். திருச்சி மருத்துவக்கல்லூரியை பொறுத்தவரை இன்று (வெள்ளிக்கிழமை) காணொலி வாயிலாக ஆய்வு நடத்தப்பட இருக்கிறது. அந்த ஆய்வு முடிந்தவுடன் அதற்கும் தீர்வு கிடைத்திவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி, பொதுப்பணித் துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன், பெருநகர சென்னை மாநகராட்சி கூடுதல் ஆணையர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் அரவிந்த், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் சாந்திமலர் உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்