சென்னை, தனியார் மாலில் ஐடி ஊழியர் உயிரிழந்த விவகாரம் - மதுவுடன் போதைப் பொருளை பயன்படுத்தியது அம்பலம்
சென்னை, அண்ணாநகரில் உள்ள தனியார் மாலில் ஐடி ஊழியர் பிரவீன் உயிரிழந்த விவகாரத்தில், மதுவுடன் போதைப் பொருளை பயன்படுத்தியது அம்பலம் ஆகி உள்ளது.
சென்னை,
சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள உள்ள ஒரு மாலில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த பிரபல புகழ்பெற்ற நபர் மந்திரா கோரா டி.ஜே நிகழ்ச்சி நடத்துவதாக கூறி ஆன்லைன் மூலம் 1500 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்துள்ளனர். இந்த மாலின் நான்காவது தளத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு ஆடல் பாடலுடன் 21 வயது கீழ் உள்ளவர்களுக்கும் மது விருந்து அளிக்கப்பட்டது.
இதில் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து சுமார் 900 இளைஞர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டது தெரிய வந்தது.எந்த ஒரு அனுமதியும் பெறாமல் இந்நிகழ்ச்சி நடந்தது.
இந்த மது விருந்தில் பங்கேற்ற மடிப்பாக்கத்தை சேர்ந்த தனியார் ஐடி நிறுவன ஊழியர் பிரவீன் என்பவர் உயிரிழந்தார்.போலீசார் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த இளைஞர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக தகவல் தெரிவித்தனர்.
அந்த மாலில் உள்ள தனியார் பாருக்கு போலீசார் சீல் வைத்தனர். நிகழ்ச்சி நடத்திய விக்னேஷ் சின்னதுரை, மார்க், பாரத் மற்றும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்து அவா்களை கைது செய்தனா். இந்த விருந்தின் போது தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் வழங்கப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது.
இந்த நிலையில், மதுவுடன் போதைப் பொருளை பயன்படுத்தியதால் பிரவீன் மரணம் அடைந்தது விசாரணையில் அம்பலம் ஆகி உள்ளது. மேலும்,தடை செய்யப்பட்ட போதை பொருட்களை வைத்திருந்ததாக கல்லூரி மாணவி உட்பட 3 பேரை போலீசாா் கைது செய்துள்ளனா்.