மின்சார வாகனம் தீப்பிடிக்காத வகையில் 'ஜிங்க் ஏர்' பேட்டரி; சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் குழு தீவிரம்
மின்சார வாகனங்களில் 'லித்தியம் அயன்' பேட்டரிகளுக்கு மாற்றாக 'ஜிங்க் ஏர்' பேட்டரிகளை உருவாக்கும் பணியில் சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சென்னை:
லித்தியம்-அயன் பேட்டரிகளுக்கு மாற்றான ஒன்றை, குறைந்த செலவில் உருவாக்கும் முயற்சியில் சென்னை ஐ.ஐ.டி. ரசாயன பொறியியல் துறை உதவிப் பேராசிரியரான அரவிந்த் குமார் சந்திரன் மற்றும் அவரது ஆராய்ச்சி குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
துத்தநாகம் பரவலாக கிடைக்கக்கூடியது என்பதால் 'ஜிங்க்-ஏர்' பேட்டரிகளில் அவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். 'ஜிங்க்-ஏர்' பேட்டரிகள் நீரின் அடிப்படையில் உருவாக்கப்படுபவை என்பதால் நீண்ட ஆயுள் கொண்டவை. மேலும் நல்ல செயல்திறனை கொண்டுள்ளன. குறைவான விலையிலும் கிடைக்கும்.
ஆராய்ச்சியின் முக்கிய நோக்கம் குறித்து அரவிந்த் குமார் சந்திரன் கூறுகையில்,
மின்சார வாகனங்களுக்கான 'ஜிங்க்-ஏர்' பேட்டரிகளுக்கு எதிர்கால மாதிரியை உருவாக்கும் பணியில் எங்கள் ஆராய்ச்சிக்குழு ஈடுபட்டுள்ளது. தற்போதுள்ள தொழில்நுட்பத்தில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து, அவற்றை சரிசெய்வதற்கான வழிகளையும் கண்டறிந்து வருகிறோம். ஆராய்ச்சியாளர்கள் குழுவினர் தற்போது 'ஜிங்க்-ஏர்' செல்களை உருவாக்கி, மின்சார வாகனங்களுக்கான 'ஜி'ங்க்-ஏர்' தொகுப்பாக உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
ஆராய்ச்சி மாணவர் அகில் கொங்கரா கூறும்போது,
எங்கள் திட்டத்தின்படி மின்சார வாகன பயனாளர்கள் 'ஜிங்க் கேசட்'களை பரிமாற்றம் செய்துகொள்ள 'ஜிங்க் ரீசார்ஜ்' நிலையங்களில் சில நிமிடங்கள் மட்டுமே செலவிடவேண்டியிருக்கும்" என்றார்.
ஆராய்ச்சி மாணவரான குஞ்சன் கபாடியா கூறுகையில்,
இந்திய சூழலுக்கு ஏற்ற வகையில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 'ஜிங்க்-ஏர் 'பேட்டரிகளில் நீரிய மின்பகுளி இருப்பதால் மிகவும் பாதுகாப்பானவை. மின்சார வாகனங்கள் விபத்தில் சிக்கும் மோசமான தருணங்களில் கூட இவை தீப்பிடிக்காது என்றார்.