இந்தியாவின் முதல் அதிவேக ரெயில் உற்பத்தி பணியில் சென்னை ஐ.ஐ.டி.

உள்நாட்டிலேயே தயாராகும் மணிக்கு 1,000 கி.மீ. வேகம் செல்லும் திறன் பெற்ற முதல் அதிவேக ரெயில் உற்பத்தியில் ரெயில்வே அமைச்சகத்துடன் சென்னை ஐ.ஐ.டி. கரம் கோர்க்கிறது.

Update: 2022-05-22 11:14 GMT

சென்னை,

இந்தியாவின் ஜனத்தொகை மொத்த பரப்பளவுடன் ஒப்பிடும்போது மிக அதிகம். தினமும் காலையில் எழுந்து வேலைக்கு செல்வோரில் பலர் ரெயில், பேருந்து போன்ற பொது போக்குவரத்து வசதிகளை நம்பியே உள்ளனர். பரபரப்பு நிறைந்த இந்த காலகட்டத்தில் போக்குவரத்து நெருக்கடி, வாகன நெரிசல், காற்று மாசுபாடு ஆகியவற்றால் பொதுமக்கள் அதிக சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இந்நிலையில், மக்களை ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்துக்கு விரைவாக கொண்டு செல்லும் முயற்சியாக புதிய போக்குவரத்து சகாப்தம் படைக்க இந்திய ரெயில்வே திட்டமிட்டு உள்ளது.

இதன்படி, ஹைப்பர்லூப் எனப்படும் தொழில்நுட்பம் சார்ந்த போக்குவரத்து ஒன்றை உருவாக்க முடிவு செய்துள்ளது. இதற்காக சென்னை ஐ.ஐ.டி.யுடன் கரம் கோர்க்கிறது.

சரி. ஹைப்பர்லூப் என்பது என்ன? என தெரிந்து கொள்வோம். குறைந்த அழுத்தம் கொண்ட சுரங்கம் வழியே, அழுத்தம் கொடுக்கப்பட்ட வாகனங்கள் அதிவேகத்தில் பயணம் செய்யும் போக்குவரத்து முறை ஆகும். காற்றின் வழியேயான இந்த பயணத்தில், வானில் விமானம் பறப்பது போல் எந்தவித தடையும் இருக்காது.

இதன்படி, விமான வேகத்தில் நிலத்தில் வாகனம் ஒன்று குறைந்த அழுத்தமுடைய சுரங்கத்தின் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு செல்லும். இதற்கு மேக்-லெவ் தொழில்நுட்பம் பயன்படுகிறது. இதனால், உராய்வு இல்லாத பயணம் சாத்தியப்படுகிறது.

இந்த பயணம் அதிவிரைவாக இருப்பதுடன், சுற்றுச்சூழலுக்கும் ஏற்றது. மின்சார ரெயிலை விட குறைந்த ஆற்றலையே எடுத்து கொள்ளும். விமானம் அல்லது டீசல் ரெயில் போன்று புகை வெளியீடு எதுவும் இருக்காது.

2017ம் ஆண்டு மத்திய ரெயில்வே மந்திரியாக சுரேஷ் பிரபு இருந்த காலத்திலேயே இதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட்டது. இதற்காக அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட ஹைப்பர்லூப் ஒன் என்ற நிறுவனத்துடன் மத்திய அமைச்சகம் பேச்சுவார்த்தையும் நடத்தியது. எனினும், அதில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இந்நிலையில், சென்னை ஐ.ஐ.டி.யின் அவிஷ்கார் ஹைப்பர்லூப் என்ற குழுவானது 2017ம் ஆண்டு உருவானது. இந்தியாவில் ஹைப்பர்லூப் சார்ந்த போக்குவரத்து முறை உருவாக்கத்திற்கான ஆக்கப்பூர்வ பணிகளில் ஈடுபட்டது.

இந்த குழு, 2019ம் ஆண்டு நடந்த ஸ்பேஸ்எக்ஸ் ஹைப்பர்லூப் போட்டியில் டாப் 10 பட்டியலில் இடம் பெற்றது. தவிர ஆசியாவில் இருந்து சென்ற ஒரே குழுவும் இதுவே. 2021ம் ஆண்டு நடந்த ஐரோப்பியன் ஹைப்பர்லூப் வீக் நிகழ்ச்சியில் சிறந்த வடிவமைப்புக்கான விருதும் பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து 2022ம் ஆண்டு மார்ச்சில் ரெயில்வே அமைச்சகத்திடம் தொடர்பு கொண்டு கூட்டு முயற்சியாக, முதன்முறையாக ஹைப்பர்லூப் சோதனை கட்டமைப்பு வசதியை ஏற்படுத்தும் பணியில் இந்த குழு இறங்கியுள்ளது.

அதன்பின்னர், உலகின் பெரிய ஹைப்பர்லூப் வெற்றிட குழாயை இந்த குழு உருவாக்க இருக்கிறது. அது, இந்திய ரெயில்வேயின் ஹைப்பர்லூப் அமைப்பின் வருங்கால ஆராய்ச்சிக்கு உதவும்.

இந்த திட்ட செயல்பாட்டிற்காக சென்னை ஐ.ஐ.டி. குழு மத்திய ரெயில்வே அமைச்சகத்திடம் நிதி உதவி கோரியுள்ளது. உற்பத்தி, பாதுகாப்பு ஒழுங்குமுறைகள் உருவாக்கம் மற்றும் மின்சார பரிசோதனை கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றுக்கு ஆகும் செலவுகளை எதிர்கொள்ள வேண்டிய கோரிக்கைக்கு, ரெயில்வே அமைச்சகம் ரூ.8.34 கோடி நிதியுதவியும் அளிக்க இருக்கிறது.

இந்த தொழில்நுட்பம் உதவியுடன் உருவாகும் அதிவேக ரெயில், பயணிகள் போக்குவரத்து தவிர, சரக்கு போக்குவரத்துகளை கையாள்வதற்கும் பயன்படும். இந்த போக்குவரத்து பயன்பாடு மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றால் அது மிகையாகாது.

Tags:    

மேலும் செய்திகள்