300-க்கும் மேற்பட்ட அரங்குகளுடன் தீவுத்திடலில் சென்னை விழா

300-க்கும் மேற்பட்ட அரங்குகளுடன் தீவுத்திடலில் நடைபெற்று வரும் சென்னை விழாவை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு சென்றனர்.

Update: 2023-05-07 18:36 GMT

சென்னை,

சென்னை தீவுத்திடலில் சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் சென்னை விழா சர்வதேச கைத்தறி, கைவினை பொருட்கள் மற்றும் உணவு திருவிழா அரங்குகளை கடந்த மாதம் 28-ந் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்.

தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ்நாட்டை சேர்ந்த கைத்தறி நெசவாளர்கள், கைவினை கலைஞர்கள் பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்துள்ள சென்னை விழாவில் தமிழ்நாட்டின் கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்த நெசவு துணிவகைகள், பட்டு சேலைகள், கோஆப் டெக்ஸ் துணி வகைகள், பூம்புகார் கைவினை பொருட்கள் 70 அரங்குகளில் இடம் பெற்றுள்ளன. மகளிர் சுயஉதவி குழுவினரின் உற்பத்தி பொருட்கள் 75 அரங்குகளில் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.

பட்டு சேலை-வேட்டிகள்

மேலும் 10 வெளிநாடுகளைச் சேர்ந்த கலைப்பொருட்கள் 30 அரங்குகளில் இடம் பெற்று உள்ளன. 20 வெளிமாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள், நெசவாளர்களின் படைப்புகள் 83 அரங்குகளில் இடம் பெற்றுள்ளன. பல்வேறு உணவு வகைகள் கொண்ட அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 311 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.

சென்னை விழாவில் காஞ்சீபுரம், ஆரணி, திருபுவனம் பட்டு சேலைகள், சேலம் வெண்பட்டு வேட்டிகள், தூய ஜரிகை சேலைகள், கோரா காட்டன் சேலைகள், மென்பட்டு சேலைகள், கோடம்பாக்கம் சேலைகள், பரமக்குடி காட்டன் சேலைகள், ராசிபுரம் தாழம்பூ கோர்வை பட்டு புடவைகள், ஆர்கானிக் கைத்தறி சேலைகள், நெகமம் கைத்தறி சேலைகள், பவானி ஜமக்காளம், படுக்கை விரிப்புகள், அலங்கார கைத்தறி துணிகள், மேஜை விரிப்புகள், தலையணை உறைகள், துண்டுகள், செட்டிநாடு சுங்கடி புடவைகள், ஓவியங்கள், மரவேலைப்பாடுகள், மகளிர் அணிகலன்கள், இயற்கை மூலிகை பொருட்கள், சிப்பிகளால் தயாரிக்கப்பட்ட கலைப்பொருட்கள், துணிப்பைகள், தஞ்சாவூர் ஓவியங்கள், மரச்சிற்பங்கள், பத்தமடை பாய் உள்பட ஏராளமான தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

குழந்தைகளுடன் பார்வையிட்டனர்

பொதுமக்களின் கண்களுக்கும், மனதுக்கும் விருந்து படைக்கும் வகையில் தினந்தோறும் 5-க்கும் மேற்பட்ட கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ள நுழைவு வாயில் மற்றும் மாட்டு வண்டி சிற்பம் ஆகியவற்றுடன் ஏராளமான பொதுமக்கள் செல்பி எடுத்துக்கொள்கின்றனர். இந்த சென்னை விழா சர்வதேச கைத்தறி, கைவினை பொருட்கள் மற்றும் உணவு திருவிழா அரங்குகளை ஏராளமான பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் பார்வையிட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்