ரூ.786 கோடி நஷ்டத்தில் அம்மா உணவகங்கள்! இருந்தாலும் தொடர்ந்து இயங்கும் மேயர் பிரியா சொல்கிறார்...!

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் சென்னை மெரினா கடற்கரையில் இலவச வைபை வசதி வழங்குவது உள்பட 65 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Update: 2022-11-29 08:27 GMT

சென்னை:

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடந்தது. துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கேள்வி நேரம் முடிந்தவுடன் நேர மில்லா நேரத்தில் நிலைக் குழு தலைவர் (கணக்கு) தனசேகரன் பேசினார். அவர் கூறியதாவது:-

சென்னையில் பருவ மழையின் போது மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும் என்று பலர் எதிர்பார்த்தார்கள். அதையெல்லாம் முறியடித்து தண்ணீர் தேங்காத நிலையை அதிகாரிகள் செய்து முடித்தனர். கணக்கு குழு வாயிலாக சில தகவல்களை இங்கு குறிப்பிடுகிறேன்.

நிலம் உடைமை துறை மூலம் மாநகராட்சியின் 446 நிலங்கள் நீண்ட கால குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. அதற்கான குத்தகை கேட்பு தொகை 31.3.2021 வரை ரூ.419.52 கோடி உள்ளது. ஆனால் அதில் ரூ.2.69 கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது.

நிலுவையாக ரூ.416.83 கோடி பாக்கி உள்ளது. மாநகராட்சிக்கு சொந்தமான நிலங்கள், கட்டிடங்கள் குத்தகைக்கு விடப்பட்டு அதற்கான வாடகை தொகை முறையாக வசூலிக்கப்படவில்லை.

குத்தகை பணத்தை செலுத்தாதவர்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மாநகராட்சி நிலங்களை ஆக்கிரமித்தவர்களிடம் இருந்து பறிமுதல் செய்ய வேண்டும்.

வெறும் நினைவூட்டல் கடிதம் கொடுத்தால் போதாது. குடிநீர், கழிவுநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையும் எடுக்க வேண்டும். சொத்து வரி, தொழில் வரி போன்றவை பல கோடி நிலுவையில் உள்ளது.

அம்மா உணவகம் நடத்துவதன் மூலம் மாநகராட்சிக்கு இதுவரை ரூ.786 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஒரு சில அம்மா உணவகங்களில் மிக குறைந்த அளவில் விற்பனையாகிறது.

ரூ.500-க்கு குறைவாக விற்பனையாகக் கூடிய அம்மா உணவகங்களை மூடி விடலாம். ஏரியா சபை கூட்டத்தை நடத்த கவுன்சிலர்களுக்கு அதிக செலவாகிறது. இந்த செலவினத்தை மாநகராட்சி ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அதற்கு மேயர் பிரியா பதில் அளித்து பேசியதாவது:- ஏரியா சபை கூட்டத்தை மாநகராட்சிக்கு சொந்தமான சமுதாய கூடம், கட்டிடங்களில் நடத்தலாம். டீ, பிஸ்கட், காபி போன்ற செலவினங்களை மாநகராட்சி ஏற்கும்.

அம்மா உணவகம் நஷ்டத்தில் இயங்கினாலும் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும். எந்த வார்டுகளில் உள்ள அம்மா உணவகங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதோ அதை குறிப்பிட்டால் அவை ஆய்வு மேற்கொண்டு மேம்படுத்தப்படும்.

அம்மா உணவகங்கள் இப்போது எப்படி செயல்படுகிறேதா அது போலவே செயல்படும். ஊழியர்கள் தேவைப்பட்டால் அந்த பகுதி கவுன்சிலர்களே நியமித்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.

மாநகராட்சி கமிஷனர் கன்தீப்சிங்பேடி பேசும் போது,

"மாநகராட்சி நிலத்தை நீண்ட கால குத்தகைக்கு விடுவதற்கு 1976-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. தற்போது குத்தகை தொகை வசூலிப்பதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன.

வழக்குகள் நடந்து வருகின்றன. குத்தகை தொகையை அதிகரிப்பது குறித்து அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது" என்றார்.

கூட்டத்தில் சென்னை மெரினா கடற்கரையில் இலவச வைபை வசதி வழங்குவது உள்பட 65 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்