சென்னை: பொருட்கள் வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றிய கொரியா நாட்டை சேர்ந்தவர் கைது

கட்டுமான பொருட்களை வாங்கி விட்டு ரூ. 5.5 கோடி பணத்தை ஏமாற்றிய தென்கொரிய நாட்டைச் சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-17 13:57 GMT

ஆவடி,

சென்னை நொளம்பூர் பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 45). இவர் சென்னை ஷெனாய் நகரில் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரிடம் திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் தென்கொரியா நாட்டைச் சேர்ந்த கீம் ஜெஹியோங் (51) என்பவர் சென்னை ஐயப்பன்தாங்கள் பகுதியில் நிறுவனம் நடத்தி வருவதாக கூறி தர்மலிங்கத்திடம் கடந்த 2018 -ம் ஆண்டு ரூ.38,62,78,401-க்கு கட்டுமான பொருட்களை வாங்கியுள்ளார்.

அதில் ரூ. 33,12,44,309 பணத்தை ரொக்கமாக செலுத்தியுள்ளார். அதன் பிறகு மீதித் தொகையான 5 கோடியே 50 லட்சத்து 34 ஆயிரத்து 92 பணத்தை செலுத்தாமல் திடீரென தலை மறைவாகிவிட்டார். இதையடுத்து தர்மலிங்கம் தீம் ஜெஹியோங்கை தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை. இதுகுறித்து தர்மலிங்கம் ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதன் பின்னர் பெங்களூருவில் தலைமறைவாக இருந்த கீம் ஜெஹியோங்கை இன்ஸ்பெக்டர் கீதா தலைமையிலான போலீசார் சென்று கைது செய்தனர். அதன் பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்