செல்லியம்மன் கோவில் தேரோட்டம்

செல்லியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.

Update: 2023-04-06 21:50 GMT

கல்லக்குடி:

புள்ளம்பாடி ஒன்றியம், ஊட்டத்தூர் கிராமத்தில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத சுத்தரத்தினேஸ்வரர் கோவில் வகையறா மாரியம்மன், செல்லியம்மன் கோவில்களுக்கு ஆண்டுதோறும் மாசிமாதம் கடைசி நாள் காப்புகட்டி பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த மாசி மாதம் 30-ந் தேதி மாரியம்மனுக்கு காப்பு கட்டி திருவிழா தொடங்கி நடந்தது. 21-ந் தேதி தேரோட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அன்று நள்ளிரவு 12 மணியளவில் செல்லியம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் மறுதிருவிழா தொடங்கியது. இதையடுத்து தினமும் செல்லியம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் மற்றும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலா நடைபெற்றது. கடந்த 4-ந் தேதி அதிகாலை 3 மணியளவில் முள்படுகளம் நடைபெற்றது. இதற்காக கருவேல முட்கள் வெட்டி வந்து சுமார் 300 மீட்டர் நீளம் 5 அடி உயரத்தில் சாலையின் இருபுறமும் முள்படுகளம் அமைக்கப்பட்டது. பின்னர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முள்ளின் மீது பக்தர்கள் படுத்து வேண்டுதலை நிறைவேற்றினார்கள். பின்னர் பொங்கல் வைத்தலும், இரவில் சாமி குதிரை வாகனத்தில் திருவீதியுலாவும் நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று பகல் 12.30 மணியளவில் செல்லியம்மன் சிலை தாங்கிய பெரிய தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் இந்திராஅறிவழகன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம பட்டையதாரர்களை அறநிலையத்துறை சார்பில் கவுரவப்படுத்தினார்கள். தேரோட்ட விழாவில் தெரணி, தெரணிபாளையம், நம்புகுறிச்சி, நெய்குளம், நெடுங்கூர், பாடாலூர், சிறுகளப்பூர், பெருவளப்பூர், பிகே அகரம், திருவளக்குறிச்சி, காணக்கிளியநல்லூர் உள்ளிட்ட சுமார் 20-க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். மேலும் செல்லியம்மன் தேர் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தபோது, ஆங்காங்கே பொதுமக்கள் அவர்கள் வீடுகளுக்கு முன்பு ஆடு, கோழி பலி கொடுத்து சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள், கிராம பட்டையதாரர்கள், முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர். இரவில் மஞ்சள் நீராட்டு விழா மற்றும் சாமி குடிபுகுதல் நிகழ்வுடன் திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) நிறைவுபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்