செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
பரமத்தி அருகே உள்ள கீழ்சாத்தம்பூர் செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பரமத்தி வேலூர்
செல்லாண்டியம்மன்
பரமத்தி அருகே கீழ்சாத்தம்பூர் கிராமத்தில் உள்ள வன்னிமர கணபதி, செல்லாண்டியம்மன், கருப்பண்ண சாமி, மதுரை வீர சாமி, புற்றுக்கண் நாகராஜா உள்ளிட்ட பரிவார கோவில்களின் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. கடந்த மாதம் 28-ந் தேதி இரவு கிராம சாந்தியும், 29-ந்் தேதி காலை விநாயகர் வழிபாடு, நவநாயகர் யாகம், தீபாராதனையும், பஞ்ச காவ்யம், வாஸ்து பூஜையும், 30-ந் தேதி சாந்தி ஹோமம், சுதர்சன யாகம், மகாலட்சுமி யாகமும் நடைபெற்றது. 31-ந் தேதி அக்னி சங்கிரகணமும் தீர்த்த சங்கிரகணமும், முளைப்பாரி அழைத்தலும், முதல்கால யாக பூஜையும் நடைபெற்றது.
கடந்த 1-ந் தேதி பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி யானை, குதிரை, ஒட்டகம், பசு ஆகியவற்றுடன் தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர். அதனைத்தொடர்ந்து சலங்கை ஆட்டமும், 2-ம் கால யாக பூஜையும், 3-ம் கால யாக பூஜையும், கோபுர கலசம் வைத்தல் மற்றும் விமான கண் திறப்பும், ஈசன் வள்ளி கும்மி மற்றும் கொங்கு ஒயிலாட்டம் நடைபெற்றது. நேற்றுமுன்தினம் 5-ம் கால யாக பூஜையும், அஷ்டபந்தன மருந்து சாற்றுதலும், கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
கும்பாபிஷேகம்
நேற்று காலை விநாயகர் வழிபாடு, பஞ்சகவ்யம், யாத்ரா தானம், கடம் புறப்பாடும், விமான ராஜகோபுர மகா கும்பாபிஷேகமும், வன்னிமர கணபதி, செல்லாண்டியம்மன், கருப்பண்ணசாமி, மதுரை வீர சாமி, புற்றுக்கண் நாகராஜா உள்ளிட்ட அனைத்து பரிவார மூல மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மகா அபிஷேகம், தசதானம், தசதரிசனம், கோபூஜை மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவில் நாமக்கல், கரூர், திருச்சி, கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விலையங்குல குடிப்பாட்டு பங்காளிகள் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கீழ்சாத்தம்பூர் செல்லாண்டியம்மன் கோவில் பரம்பரை தர்மகர்த்தா வேலுசாமி, கோவில் நிர்வாக குழுவினர் மற்றும் விலையங்குல குடிப்பாட்டு பங்காளிகள் செய்திருந்தனர். பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.