பண்ணாரி சோதனை சாவடியில் கார் மீது பாய்ந்து சென்ற சிறுத்தை; சமூக வலைதளங்களில் வைரலாகும் காட்சி
பண்ணாரி சோதனை சாவடியில் கார் மீது சிறுத்தை பாய்ந்து செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சத்தியமங்கலம்
பண்ணாரி சோதனை சாவடியில் கார் மீது சிறுத்தை பாய்ந்து செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திம்பம் மலைப்பாதை
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள திம்பம் மலைப்பாதை தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் முக்கிய வழித்தடமாக உள்ளது.
அடர்ந்த வனப்பகுதியில் செல்லும் இந்த மலைப்பாதையில் அடிக்கடி யானைகள், சிறுத்தைகள் உலா வருவது வழக்கம் ஆனால் கடந்த சில நாட்களாக மலைப்பாதையை விட்டு அடிவாரத்தில் உள்ள பண்ணாரி கோவில் பகுதியிலேயே சிறுத்தைகள் நடமாடுவதை பலர் பார்த்துள்ளார்கள்.
இந்தநிலையில் கோவையை சேர்ந்த சிலர் காரில் நேற்று முன்தினம் மாலை கர்நாடக மாநிலம் மைசூருக்கு சென்று கொண்டு இருந்தார்கள்.
கார் மீது பாய்ந்தது
சத்தியமங்கலத்தை கடந்து பண்ணாரி சோதனை சாவடி அருகில் அவர்கள் சென்றபோது திடீரென ரோட்டின் ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்துக்கு கார் மீது ஒரு சிறுத்தை பாய்ந்து சென்றது.
இதைக்கண்டு காரில் இருந்தவர்கள் பயத்தில் அலறினார்கள். பின்னர் சிறிது தூரம் கடந்து காரை நிறுத்தி பார்த்தபோது ரோட்டு ஓரத்தில் இருந்து காட்டுக்குள் சிறுத்தை செல்வது தெரிந்தது. உடனே காரில் வந்தவர்களும், அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்களும் சிறுத்தையை செல்போனில் படம் பிடித்தார்கள். இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கிடையே திம்பம் மலைப்பாதையில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் உஷாராக இருக்கவேண்டும் என்றும், காரில் செல்பவர்கள் வனவிலங்குகளை கண்டால் கீழே இறங்கவேண்டாம் என்றும் வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.