சிறை தண்டனை பெற்று தலைமறைவாக இருந்தவர் கைது
‘செக்’ மோசடி வழக்கில் சிறை தண்டனை பெற்று தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டாா்.
கும்பகோணம்;
'செக்' மோசடி வழக்கில் சிறை தண்டனை பெற்று தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டாா்.
ரூ.22¾ லட்சம் கடன்
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தேவனாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் ஜகபர் அலி(வயது 39). இவரிடம், தாராசுரம் பகுதியை சேர்ந்த வடிவேல் மகன் உதயராஜ்(30), ரூ.25 லட்சம் கடன் கேட்டார்.இதைத்தொடர்ந்து ஜகபர் அலி கடந்த 2021-ம் ஆண்டு ரூ.22 லட்சத்து 70 ஆயிரத்தை உதயராஜிடம் வழங்கினார். அதற்காக உதயராஜிடம் இருந்து 2 'செக்' குகளை பெற்றுக்கொண்டார்.சில நாட்களுக்கு பிறகு, உதயராஜிடம், தான் கொடுத்த பணத்தை ஜகபர் அலி திருப்பி கேட்டுள்ளார். ஆனால் உதயராஜ் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை.
சிறை தண்டனை
இதனால் ஜகபர் அலி, உதயராஜ் தன்னிடம் கொடுத்த செக்கை வங்கியில் செலுத்தினார். ஆனால் உதயராஜ் வங்கி கணக்கில் பணம் இல்லை என தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து ஜகபர்அலி, கும்பகோணம் கோர்ட்டில், உதயராஜ் மீது வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு விசாரணை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20-ந் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி, உதயராஜிக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 லட்சம் அபராதமும், அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.
கைது
இதைத்தொடர்ந்து உதயராஜ் தலைமறைவானார். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த உதயராஜை கும்பகோணம் தாலுகா போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.