சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை-விதவிதமான சிலைகள் வைத்து வழிபாடு

சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. மேலும் பல்வேறு இடங்களில் விதவிதமான சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.

Update: 2022-08-31 16:30 GMT

கிருஷ்ணகிரி:

விநாயகர் சதுர்த்தி

நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் சிறிய விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்தனர். சாமிக்கு அருகம் புல், எருக்கம் பூ மாலை அணிவித்தும், வண்ண குடையால் அலங்காரம் செய்தும் பூஜை செய்தனர். தொடர்ந்து சாமிக்கு கொழுக்கட்டை, சுண்டல் போன்றவை படைத்து வழிபட்டனர்.

608 லிட்டர் பால் அபிஷேகம்

கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பழைய சப்-ஜெயில் சாலையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் காலை 6 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையொட்டி விநாயகருக்கு 608 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. பின்னர் தங்கக்கவச அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதே போல், கிருஷ்ணகிரி காந்திசாலை வரசித்தி விநாயகர் சந்தனக்காப்பு அலங்காரத்திலும், புதிய வீட்டு வசதி வாரியம் வினைதீர்த்த விநாயகர் சிறப்பு அலங்காரத்திலும், பழையபேட்டை கொத்தபேட்டா ஞான விநாயகர் தங்கக்கவச அலங்காரத்திலும், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரசித்தி விநாயகர் தங்கக் கவச அலங்காரத்திலும், காந்திநகர் வலம்புரி விநாயகர் சிறப்பு அலங்காரத்திலும், சேலம் சாலை ஆதிசக்தி விநாயகர் வெள்ளிக் கவச அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மேலும் கிருஷ்ணகிரி நகரில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன.

பாலபூர் கணேசா

ஓசூர் எம்.ஜி. ரோட்டில் உள்ள விநாயகர் கோவில், என்.ஜி.ஓ. காலனியில் உள்ள செல்வ விநாயகர் கோவில், உழவர் சந்தை பின்புறமுள்ள மவுனகுரு விநாயகர் கோவில் மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

ஓசூரில் சிவசேனா கட்சி சார்பில் 'பாலபூர் கணேசா' விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. சுமார் 15 அடி உயர இந்த சிலை, காதுகளை அசைத்தவாறும், கண்களை மூடி திறக்கும்படியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை ஏராளமான பக்தர்கள் ஆர்வமுடன் பார்த்து, வழிபட்டு சென்றனர்.

இதேபோல் ஓசூர் ராம் நகர், ஜனப்பர் தெரு, ஏரித்தெரு, நேதாஜி ரோடு உள்ளிட்ட இடங்களில் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் வைத்து பூஜைகள் செய்யப்பட்டன.

கே.ஜி.எப். விநாயகர்

தேன்கனிக்கோட்டை ஆஞ்சநேயர் கோவில் அருகே விநாயகர் சதுர்த்தியையொட்டி ராஜ மார்த்தாண்ட பக்த மண்டலி சார்பில் கே.ஜி.எப். சினிமா செட் போன்று பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. அதன் முகப்பில் பிரமாண்டமான காளி உருவம் உள்ளது.

இதைத்தொடர்ந்து வரும் குகை வழியாக சென்றால், அங்கே பல வண்ண விளக்குகள் அலங்காரத்தில் கே.ஜி.எப். விநாயகர் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இந்த செட் ரூ.15 லட்சம் செலவில் கே.ஜி.எப். படக்குழுவினர் மூலம் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1,574 இடங்களில் சிலைகள்

இதேபோல் மாவட்டம் முழுவதும் 1,574 இடங்களில் சதுர்த்தியையொட்டி விதவிதமான சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. 

மேலும் செய்திகள்