வைத்தீஸ்வரன்கோவிலில் தேர் திருவிழா

தைமாத உற்சவத்தையொட்டி வைத்தீஸ்வரன்கோவிலில் தேர் திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2023-02-06 18:45 GMT

சீர்காழி:

தைமாத உற்சவத்தையொட்டி வைத்தீஸ்வரன்கோவிலில் தேர் திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

வைத்தியநாதசாமி கோவில்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வைத்தியநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைத்தியநாதசாமி, தையல்நாயகி அம்மன், விநாயகர், செல்லமுத்து குமாரசாமி, அங்காரகன் (செவ்வாய்), தன்வந்திரி ஆகியோர் தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இந்த கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து தினமும் ஏராளமானோர் நேரில் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தேர் திருவிழா

தை மாத உற்சவத்தையொட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் உற்சவம் தொடங்கப்பட்டது. தினமும் சாமி, அம்பாள், விநாயகர், முருகன் உள்ளிட்டோர் வீதி உலா நடைபெற்றது. நேற்று தேர் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி மேலவீதியில் அலங்கரித்து வைக்கப்பட்ட தேரில் செல்வமுத்துகுமாரசாமி வள்ளி தெய்வானையோடு வைக்கப்பட்டு மேளதாளங்கள் முழங்க கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் தேைர வடம் பிடித்து தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து வடக்கு வீதி, தெற்கு வீதி வழியாக மீண்டும் தேர் மேலவீதியை வந்து அடைந்தது.

பாதுகாப்பு ஏற்பாடு

இதில் பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர், செயல் அலுவலர் அசோகன், தி.மு.க. மாவட்ட பொருளாளர் அலெக்ஸாண்டர், பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தன், வர்த்தக சங்க செயலாளர் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் செய்திருந்தனர். குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை பணிகள் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி சார்பில் செய்யப்பட்டிருந்தது. இந்த தேர் திருவிழாவையொட்டி மயிலாடுதுறை- சிதம்பரம் சாலையில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்