மதுரை கோட்ட ரெயில்வேயில் தென் மாவட்ட ரெயில்களில் போக்குவரத்து மாற்றம்- வருகிற 31-ந் தேதி வரை நீட்டிப்பு

மதுரை கோட்ட ரெயில்வேயில் தென் மாவட்ட ரெயில்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வருகிற 31-ந் தேதி வரை நீட்டிப்பு

Update: 2022-10-15 20:12 GMT


மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மற்றும் மின் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் கடந்த 2 மாதங்களாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே, இந்த ரெயில்கள் கடந்த 15-ந் தேதி வரை மாற்றத்துடன் இயக்கப்பட்டு வந்தன. தற்போது இந்த மாற்றம் வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, வெள்ளனூர்-புதுக்கோட்டை, மானாமதுரை - மேல கொன்னக்குளம், திண்டுக்கல் - அம்பாத்துரை, ராஜபாளையம் - சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து, திருச்சி - மானாமதுரை எக்ஸ்பிரஸ் கட்டண பயணிகள் ரெயில் (வ.எண்.06829/06830) வருகிற 31-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தவிர பிறநாட்களில் சிவகங்கை - மானாமதுரை இடையே இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.கோவை - நாகர்கோவில் பகல் நேர எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16322) இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 26-ந் தேதி வரை, செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் 90 நிமிடங்கள் காலதாமதமாக இயக்கப்படும். அதே காலகட்டத்தில், சென்னை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16127) மதுரை கோட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் 70 நிமிடங்கள் காலதாமதமாகவும், வெள்ளிக்கிழமைகளில் 95 நிமிடங்கள் காலதாமதமாகவும் இயக்கப்படும்.

எனவே, மேற்கண்ட நாட்களில் இந்த ரெயிலுக்காக மணியாச்சியில் இருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்படும் இணைப்பு ரெயில் சேவை இருக்காது. மதுரையில் இருந்து தினமும் நண்பகல் 11.30 மணிக்கு செங்கோட்டைக்கு புறப்பட்டு செல்லும் எக்ஸ்பிரஸ் கட்டண பயணிகள் ரெயில் (வ.எண்.06663), செங்கோட்டையில் இருந்து நண்பகல் 11.50 மணிக்கு மதுரை புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் கட்டண பயணிகள் ரெயில் (வ.எண்.06664) இன்று முதல் வருகிற 31-ந் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

பாலக்காடு-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16731/16732) வருகிற 27, 28 மற்றும் 31-ந் தேதிகளில் இரு மார்க்கங்களிலும் திண்டுக்கல் - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து வழக்கமான நேரத்துக்கு பாலக்காடு புறப்பட்டு செல்லும்.

Tags:    

மேலும் செய்திகள்