கறிக்கோழி கொள்முதல் விலை உயர வாய்ப்பு

புரட்டாசி மாதம் நிறைவு பெறுவதையொட்டி கறிக்கோழி கொள்முதல் விலை உயர வாய்ப்பு உள்ளது என உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

Update: 2023-10-15 18:45 GMT

தமிழகத்தில் பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் தினசரி 30 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. பண்ணை கொள்முதல் விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு தினசரி நிர்ணயம் செய்கிறது.

கடந்த 1-ந் தேதி கறிக்கோழி விலை கிலோ ரூ.106 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. அது படிப்படியாக கிலோவுக்கு ரூ.7 உயர்ந்து கிலோ ரூ.113 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி கிலோவுக்கு ரூ.10 குறைக்கப்பட்டது. இது பண்ணையாளர்களை கவலை அடைய செய்தது.

இது குறித்து கறிக்கோழி உற்பத்தியாளர்கள் சிலர் கூறியதாவது:-

கறிக்கோழி கொள்முதல் விலையில் இருந்து ரூ.10 வரை குறைத்து, வியாபாரிகள் கோழிகளை பிடித்தனர். அதனால், பண்ணையாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டது. அவற்றை தவிர்க்க கொள்முதல் விலை ரூ.10 குறைக்கப்பட்டது. தற்போது புரட்டாசி மாதம் பலர் விரதம் இருந்து வருகின்றனர். நாளை (செவ்வாய்க்கிழமை) புரட்டாசி மாதம் நிறைவு பெறுகிறது. எனவே அடுத்து வரும் நாட்களில் கறிக்கோழி நுகர்வு அதிகரித்து, கொள்முதல் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

புரட்டாசி மாத கடைசி சனி நிறைவு பெற்றதால், நேற்றே நாமக்கல்லில் உள்ள இறைச்சி மற்றும் மீன் கடைகளில் கூட்டம் அலைமோதியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்