தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்.
சென்னை,
தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் தென்மேற்கு பருவமழையால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை பெய்கிறது. இதன் தொடர்ச்சியாக மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் மேலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 14-ந் தேதி வரை 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
வருகிற 12 மற்றும் 13-ந் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் தேவகோட்டை 6 செ.மீ., சங்கராபுரம், சின்னக்கல்லாறு தலா 5 செ.மீ., விழுப்புரம், வானூர், பந்தலூர் தாலுகா அலுவலகம், சின்கோனா தலா 4 செ.மீ., தேவாலா, அவலாஞ்சி, அறந்தாங்கி, கூடலூர் பஜார், சோலையாறு, வால்பாறை, லப்பைக்குடிக்காடு, மேல்கூடலூர் தலா 3 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்திருக்கிறது.