தமிழகத்தில் 8 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வெப்பசலனம், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
சென்னை,
தமிழகத்தில் வெப்பசலனம், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 15-ந்தேதி (புதன்கிழமை) வரை சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது" இவ்வாறு தெரிவித்துள்ளது.