தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2023-09-16 23:57 GMT

கோப்புப்படம் 

சென்னை,

கிழக்கு மத்திய பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது மேற்கு திசையை நோக்கி நகர்ந்தது. இதன் காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது.

அந்த வகையில் நேற்றும் சென்னை உள்பட சில இடங்களில் மழை பெய்தது. அதிலும் சென்னையில் ஓரிரு இடங்களில் ஐஸ் கட்டி மழை பெய்ததாகவும் கூறப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 10 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

இதையடுத்து நாளை (திங்கட்கிழமை) முதல் 20-ந்தேதி (புதன்கிழமை) வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில், ஊத்துக்கோட்டை 6 செ.மீ., பொன்னேரி 5 செ.மீ., கத்திவாக்கம் 4 செ.மீ., பந்தலூர் தாலுகா அலுவலகம், கும்மிடிப்பூண்டி, அரிமளம், மேட்டூர், சின்னக்கல்லார், தாமரைப்பாக்கம் தலா 3 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்து இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்