ஊதியூர் பகுதியில் தொடர்ந்து ஆடுகள் திருட்டு போனதைத் தொடர்ந்து பொதுமக்களே சோதனை சாவடி அமைத்து காவல் காத்து வருகின்றனர்.
ஆடு வளர்ப்பு
காங்கயம், ஊதியூர், குண்டடம் போலீஸ் நிலையத்திற்கு உப்பட்ட பகுதிகளில் பட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த செம்மறியாடுகளை மர்ம நபர்கள் திருடி செல்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. குறிப்பாக ஊதியூர் பகுதிகளில் அதிகளவில் விவசாயிகள் செம்மறியாடுகளை வளர்த்து வருகின்றனர். அதனால் ஊதியூர் பகுதிகளில் அடிக்கடி ஆடு திருட்டு சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இதையடுத்து முதலிபாளையம், வாணவராயநல்லூர், அப்பியபாளையம், கொத்தனூர், புங்கந்துறை, சிறுகிணறு உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆங்காங்கே தாங்களாகவே சோதனை சாவடி அமைத்து பாது காத்து வருகின்றனர்.
இரவு முழுவதும் சுழற்சி முறையில் விழித்திருந்து அந்தந்த பகுதிகளில் செல்லும் வாகனங்களை சோதனையிட்டு அனுப்பி வருகின்றனர். சந்தேகப்படும்படி வாகனங்களில் செல்வோர் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கின்றனர்.
ரோந்து பணி
தவிர இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் ரோந்து செல்கின்றனர். போலீசாரும் தொடர்ச்சியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் கண்பாணிப்பால் ஆடு திருட்டு சம்பவங்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.