மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் தலைவர்-கவுன்சிலர்கள் வெளிநடப்பு
மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் தலைவர்-கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தாமரைக்குளம்:
அரியலூர் பல்துறை வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலக கூட்டரங்கில், நேற்று மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் நடைபெறும் என்றும், இந்த கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் (வார்டு உறுப்பினர்கள்) மற்றும் கனிம வளம் சுரங்கத் துறை, ஊரக வளர்ச்சி முகமை, சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டுத்துறை என 23 துறைகளுக்கு மாவட்ட ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்கனவே கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அசோகன், மாவட்ட ஊராட்சி செயலாளர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது மாவட்ட ஊராட்சி தலைவர் பேசுகையில், ஏற்கனவே கடிதம் அனுப்பியும் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது. இதனால் உறுப்பினர்களின் கோரிக்கைகளை யாரிடம் தெரிவிப்பது. அதற்கான தீர்வை யார் சொல்வது?. கலெக்டர் போன்றோர் நடத்தும் கூட்டங்களில் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். ஆனால் இந்த கூட்டத்தில் அவர்கள் கலந்து கொள்ளாததை கண்டித்து, வெளிநடப்பு செய்வதாக, கூறினார். இதையடுத்து மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் அசோகன் மற்றும் அ.தி.மு.க., பா.ம.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் தி.மு.க. கவுன்சிலர் கீதாஜெயவேல் மட்டும் வெளிநடப்பு செய்யாமல் கூட்ட அரங்கில் அமர்ந்திருந்தார். இதையடுத்து எந்தப் பொருளும் விவாதிக்கப்படாமல், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.