ஆடிப்பூர திருக்கல்யாண திருவிழா தேரோட்டம்

திருவாடானையில் சிநேகவல்லி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.

Update: 2022-07-31 16:45 GMT

தொண்டி, 

திருவாடானையில் சிநேகவல்லி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.

திருவிழா

திருவாடானையில் தமிழகத்தில் மிகப்பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேசுவரர் கோவில் உள்ளது. ராமநாதபுரம் சமஸ்தான ராணி பிரம்ம கிருஷ்ண ராஜேஸ்வரி நாச்சியார் நிர்வாகத்தின்கீழ் உள்ள இந்த கோவிலில் ஆடிப்பூர திருக்கல்யாண திருவிழா நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதனையொட்டி சினேகவல்லி அம்மன் கோவிலில் இருந்து பரிவார தெய்வங்களுடன் தேர் நிலைக்கு எழுந்தருளினார்.

மாலை 3.20 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. ராஜ மரியாதை நாட்டார் மரியாதை நிகழ்ச்சிகள், தொடர்ந்து தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். ரதவீதிகளில் வல்ம் வந்த தேர் மாலை 4.35 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது. தொடர்ந்து அம்பாள் தேர்தடம் பார்த்தல் நிகழ்ச்சி, தீபாராதனை நடைபெற்றது.

இதையொட்டி பக்தர்களுக்கு பல இடங்களில் நீர்-மோர், குளிர்பானம் வழங்கப்பட்டது.

பாதுகாப்பு

நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதில் தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், சரக பொறுப்பாளர் பாண்டியன், மாவட்ட முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் சங்கத் தலைவர் அஞ்சுகோட்டை விவேகானந்தன், திருவாடானை ஊராட்சி தலைவர் இலக்கியா ராமு மற்றும் நாட்டார்கள், நகரத்தார்கள் சுற்றுவட்டார பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பூஜைகளை ஆலயக்குருக்கள் சுப்பிரமணிய சிவாச்சாரியார், சந்திரசேகர சிவாச்சாரியார் ஆகியோர் நடத்தினர். திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு நிரேஷ், தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்