காப்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளி, கல்லூரி விடுதிகளில் சிறப்பாக செயல்பட்ட காப்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளி, கல்லூரி விடுதிகளில் சிறப்பாக செயல்பட்ட காப்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கினார்.
குறை தீர்க்கும் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மின்சார வசதி, சாலை வசதி, வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனுக்கள் கொடுத்தனர். கூட்டத்தில் மொத்தம் 340 மனுக்கள் பெறப்பட்டன.
அந்த மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அய்யப்பன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுகுமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பாராட்டு சான்றிதழ்
தொடர்ந்து 2021-2022-ம் ஆண்டில் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்டு முதல் இடம் பிடித்த அஞ்செட்டி அரசு பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளி மாணவர் விடுதி காப்பாளர் முருகன், 2-ம் இடம் பிடித்த பர்கூர் அரசு மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவிகள் விடுதி காப்பாளினி சந்திரா, 3-ம் இடம் பிடித்த போச்சம்பள்ளி அரசு மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளி மாணவிகள் விடுதி காப்பாளினி லட்சுமி ஆகியோருக்கு பரிசு, விருது, கேடயங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.