பழவந்தாங்கல் முதல் விமான நிலையம் வரை மத்திய தொழிற்படை போலீசார் மோட்டார் சைக்கிள் பேரணி
பழவந்தாங்கல் முதல் விமான நிலையம் வரை மத்திய தொழிற்படை போலீசார் மோட்டார் சைக்கிளில் பேரணியாக சென்றனர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய தொழிற்படை போலீசார், 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிள் பேரணியில் ஈடுபட்டனர். 100 மோட்டார் சைக்கிள்களில் மத்திய தொழிற்படை போலீசார் தேசியக் கொடியை பிடித்தபடி பேரணியாக சென்றனர்.
பேரணியை விமான நிலைய ஆணையக இயக்குனர் சரத்குமார், மத்திய தொழிற்படை போலீஸ் டி.ஐ.ஜி. ஸ்ரீராம் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். பழவந்தாங்கல் மத்திய தொழிற்படை குடியிருப்பில் இருந்து தொடங்கிய பேரணி ஜி.எஸ்.டி. சாலை வழியாக மீனம்பாக்கம், திரிசூலம் சென்று விமான நிலையம் சென்றடைந்தது. பின்னர் பன்னாட்டு முனையம், உள்நாட்டு முனையம் ஆகியவற்றில் சுற்றி விட்டு மீண்டும் பழவந்தாங்கலை வந்தடைந்தது.