'மத்திய அரசின் திட்டங்கள் புரியாத மொழிகளில் உள்ளன' - கனிமொழி எம்.பி. பேச்சு

மாநில உரிமைகளை பறிக்கும் முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது என கனிமொழி எம்.பி. விமர்சித்துள்ளார்.

Update: 2024-02-16 15:18 GMT

நெல்லை,

2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு தி.மு.க. தொடர் பொதுக் கூட்டங்களை நடத்துகிறது. 'உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்-பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்' என்ற தலைப்பில் நாடாளுமன்ற தொகுதி வாரியாக பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

இதன்படி நெல்லையில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி, அமைச்சர் தங்கம் தென்னரசு, தி.மு.க. எம்.எல்.ஏ. அப்துல் வகாப், தி.மு.க. மத்திய மாவட்ட கழக பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன் கான், நெல்லை மேயர் சரவணன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது;-

"மத்திய அரசின் திட்டங்கள், மசோதாக்கள் என அனைத்திலும் மாநில உரிமைகளையும், அடையாளங்களையும் அழிக்கக் கூடியதாக இருக்கின்றன. மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் புரியாத மொழிகளில் உள்ளன.

பிரதமர் பல இடங்களில் திருக்குறள் சொல்கிறார், உலகின் பழமையான மொழி தமிழ் மொழிதான் என்று கூறுகிறார் என்று பா.ஜ.க.வினர் சொல்கின்றனர். ஆனால் சமஸ்கிருதத்திற்கும், இந்திக்கும் நிதியை அள்ளி, அள்ளி கொடுக்கும் அவர்கள், தமிழுக்கு கிள்ளி கூட கொடுப்பதில்லை.

தென்மாநிலங்களை அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க.வுக்கு வாக்களிக்காத மக்களின் நிலை என்னவானாலும் பரவாயில்லை என மத்திய அரசு நினைக்கிறது.

மத்திய அரசு நமக்கு எந்த உதவியும் செய்வதில்லை. தொடர்ந்து தடைகளை உருவாக்குகிறார்கள். ஆனால் இதையெல்லாம் மீறி தமிழ்நாட்டை முதன்மையான மாநிலமாக நாம் உருவாக்கிக் காட்டியிருக்கிறோம்.

உத்தர பிரதேசத்திற்கு மத்திய அரசு நிதியை அள்ளிக் கொடுக்கிறது. அங்கு பா.ஜ.க. 10 வருடங்களாக ஆட்சியில் இருந்தும் ஏன் அது இன்னும் வளர்ச்சி பெறாத மாநிலமாக இருக்கிறது என்பதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும்."

இவ்வாறு கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்