தமிழக அரசு டாக்டர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் -அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழக அரசு டாக்டர்களுக்கு மத்திய அரசு வழங்குவது போலவே இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Update: 2023-08-11 18:51 GMT

சென்னை,

மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையாக தமிழக அரசு டாக்டர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்ற அரசு டாக்டர்களின் கோரிக்கைக்கு வயது 13 ஆண்டுகள். இந்த கோரிக்கைக்காக நடத்தப்படும் தொடர் போராட்டத்திற்கு இம்மாதம் 23-ந் தேதியுடன் வயது 4 ஆண்டுகள். கடந்த 4 ஆண்டுகளாக அரசு டாக்டர்கள் தங்களின் கோரிக்கைகளுக்காக அறவழிகளில் தொடர் போராட்டங்களை நடத்தியும் தற்போது வரை அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதது வருத்தம் அளிக்கிறது.

அதேபோல், கொரோனா முதல் அலையின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவம் அளிக்கும் பணியில் இருந்தபோது கொரோனா தாக்கி உயிரிழந்த காது, மூக்கு, தொண்டை டாக்டர் விவேகானந்தனின் மனைவி திவ்யாவுக்கு கருணை அடிப்படையில் அவரது கல்வி தகுதிக்கு ஏற்ற வேலை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக கண்டுகொள்ளப்படாமல் இருக்கிறது. இது பணியின்போது உயிரிழந்த அரசு டாக்டர்கள் செய்த தியாகத்தை அங்கீகரிக்க மறுக்கும் செயல் ஆகும்.

இணையான ஊதியம்

உயிர்காக்கும் பணியில் உள்ள டாக்டர்களை, அவர்களின் கோரிக்கைகளுக்காக போராட வேண்டிய சூழலுக்கு ஆளாக்குவதே அடக்குமுறை. அந்த நிலையை மாற்றி தமிழக அரசு டாக்டர்களுக்கு மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம், கொரோனா காலத்தில் பணி செய்யும்போது உயிரிழந்த 9 டாக்டர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் திவ்யா உள்ளிட்ட தலா ஒருவருக்கு அரசு வேலை ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

அதன் மூலம் இந்திய விடுதலையின் 75-வது ஆண்டு நிறைவடையவுள்ள சூழலில் அரசு டாக்டர்களுக்கு மன உளைச்சலில் இருந்து விடுதலை அளிக்க வேண்டும். அதுதான் அரசு டாக்டர்களின் தியாகத்திற்கும், அர்ப்பணிப்புக்கும் அரசால் அளிக்கப்படும் அங்கீகாரமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்