மத்திய பட்ஜெட் தொழில் வளர்ச்சிக்கு உதவும்

மத்திய பட்ஜெட் தொழில் வளர்ச்சிக்கு உதவும்

Update: 2023-02-01 18:45 GMT

கோவை

மத்திய பட்ஜெட்டுக்கு கோவை தொழில் அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து கோவை தொழில் அமைப்புகள் கருத்துக்களை வெளியிட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

70 மதிப்பெண் வழங்குகிறோம்

இந்திய தொழில் வர்த்தகசபை தலைவர் ஸ்ரீராமுலு:-

மத்திய பட்ஜெட்டுக்கு 70 மதிப்பெண் வழங்குகிறோம்.இந்த பட்ஜெட்டில் தொழில்துறைக்கு பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத திட்டத்துக்கு ரூ.9 ஆயிரம் கோடி ஒதுக்கி இந்த திட்டத்தை நீட்டிப்பதை வரவேற்கிறோம். விவசாயத்துறைக்கும் கூடுதல் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. சிறந்த தொழில்முனைவோர்களை உருவாக்க பயிற்சி அளிக்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டை வரவேற்கிறோம்.

பலன் அளிக்கும் பட்ஜெட்

முன்னாள் தலைவர் பாலசுந்தரம்:- வரும் தேர்தலுக்கான பட்ஜெட்டாக இருந்தாலும், மத்திய அரசின் அறிவிப்புகள் ஒன்றரை ஆண்டுகளில் பலன் அளிக்கும். வருமான உச்சவரம்பு ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தில் இருந்து ரூ.3 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தனிநபர்களுக்கு ஓரளவுக்கு ஆறுதல் அளிக்கும். புதிய வரிவிதிக்கப்படவில்லை என்பது ஒரு ஆறுதலான விஷயம். தகவல் தொழில்நுட்ப தொழிலை மேம்படுத்த தாமிரத்துக்கு இறக்குமதி வரிச்சலுகை வரவேற்புரிக்குரியது. தொழில் துறை முன்னேற்றத்துக்கு மொத்தம் ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற அறிவிப்பும், ஒரு கோடி விவசாயிகளுக்கு ஆர்கானிக் பார்ம் அமைக்க உதவுவது, தமிழக விவசாயிகளுக்கு கூடுதல் நன்மை அளிக்கும்.

ரூ.9 ஆயிரம் கோடி போதாது

கோவை பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்கம் (கோப்மா) தலைவர் மணிராஜ்:- சிறுகுறு தொழில் மந்தநிலையில் உள்ளது. குறுந்தொழில்முனைவோர்கள் பெரிதும் எதிர்பார்த்த தொழில்மீதான வங்கி கடன் மற்றும் கொரோனா கால கடன்கள் மீதான வட்டி குறைப்பு அறிவிப்பு ஏதும் பட்ஜெட்டில் இடம்பெறாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. சிறுகுறு நிறுவனங்கள் புத்துயிர் பெற ரூ.9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு என்பது யானைப்பசிக்கு சோளப்பொரி கதையாக உள்ளது. தனிநபர் வருமான வரிவிலக்கு அதிகரிப்பு போன்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

ஜவுளித்தொழில் வளர்ச்சிக்கு உதவும்

இந்திய ஜவுளி தொழில்கூட்டமைப்பு தலைவர் ராஜ்குமார்:- இது எதிர்காலம் சார்ந்த பட்ஜெட் இதனை வரவேற்கிறோம். பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பருத்திக்கான 5 புதிய எச்.எஸ். குறியீடுகளை வகைப்படுத்தி இருப்பதன் மூலம் பருத்தி துறையை இந்திய சந்தையில் ஊக்குவிக்க உதவும். பருத்திக்கான உள்கட்டமைப்பை அதிகரிப்பதன் மூலம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பருத்தியின் தரத்தை மேம்படுத்தும். பருத்தி மற்றும் கழிவுகள் மீதான 10 சதவீத இறக்குமதி வரியை நீக்குவதற்கு இந்திய ஜவுளி தொழில்கூட்டமைப்பு முன்மொழிந்தது. ஜவுளி எந்திரங்களின் இறக்குமதி வரியை 7 சதவீதமாக அதிகரித்து இருப்பது இந்த துறையில் உள்ளவர்கள் திட்டமிட்டுள்ள புதிய முதலீடுகளை பாதிக்கும்.

பருத்தி விளைச்சலுக்கு உதவும்

தென்இந்திய நூற்பாலைகள் சங்க தலைவர் ரவிசாம்:- இந்த பட்ஜெட் வளர்ச்சிக்கு உகந்த பட்ஜெட். எங்கள் சங்கம் மத்திய அரசை வலியுறுத்தி வந்தநிலையில் இந்த பட்ஜெட்டில் இந்தியாவில் நீளமான பருத்தி உற்பத்தியை அதிகரிப்பதற்கான அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். நாட்டில் இ.எல்.எஸ்.ரக பருத்தியின் தேவை 20 லட்சம் பேல்கள் ஆகும். 5 லட்சம் பேல்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, இறக்குமதியை நம்பி உள்ளோம். ஜவுளி ஆலைகளை மேம்படுத்த (டப் ஸ்கீம்) கடந்த ஆண்டைவிட இந்தஆண்டு ரூ.900 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது ஜவுளித்துறையினருக்கு உதவும்.

வளர்ச்சிக்கான பட்ஜெட்

மத்திய அரசின் லகு உத்யோக் பாரதி அமைப்பின் மாநில துணைத்தலைவர் கல்யாண்சுந்தரம்:-

வருமானவரி விலக்கு ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது இளைஞர்களுக்கும், சிறு தொழில் முனைவோருக்கும் பெரும் பயனை அளிக்கும். பட்ஜெட்டில் மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்கள் வளர்ச்சியடையும். சிறு தொழில் வளர்ச்சிக்கான கடன் உத்தரவாத திட்டம் நீட்டிக்கப்பட்டது நன்மை அளிக்கும். விவசாய கடன்களுக்கு மட்டும் ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதன் மூலம் விவசாயத்துறை வளரும். இதுநாட்டின் வளர்ச்சிக்கான பட்ஜெட்.

(பாக்ஸ்)

ரூ.9 ஆயிரம் கோடி பலன் அளிக்குமா?

சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வங்கியில் வாங்கப்படும் கடன்களுக்கு உத்தரவாதம் அளிக்க ரூ.9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிதி போதாது என்றும், சில அமைப்புகள் வரவேற்றும் பெரும்பாலான சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன. இதேபோல் மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த மூலப்பொருள் விலை நிர்ணய கமிட்டியை அமைக்க வேண்டும் என்று சிறு, குறு தொழில் அமைப்புகள் வற்புறுத்தி வந்தன. இது தொடர்பான அறிவிப்பு இல்லாததும் ஏமாற்றம் அளிப்பதாக சிறு, குறு தொழில் அமைப்புகள் தெரிவித்தன.

மேலும் கொரோனா காலத்தில் பெறப்பட்ட வங்கி கடனுக்கான வட்டி விகித குறைப்பு அறிவிப்பு இல்லாததும் ஏமாற்றம் அளிப்பதாகவும், சிறு குறு தொழிகள் மிகுந்த சிரமத்தில் உள்ள நிலையில் பட்ஜெட் அறிவிப்பு திருப்தி அளிக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்