மத்திய-மாநில அரசுகளை கண்டித்து நோட்டீசு வினியோகித்த மதுரையை சேர்ந்த அக்காள்-தங்கை கைது
ஈரோடு பஸ் நிலையத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நோட்டீசு வினியோகம் செய்த மதுரையை சேர்ந்த அக்காள்-தங்கையை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு பஸ் நிலையத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நோட்டீசு வினியோகம் செய்த மதுரையை சேர்ந்த அக்காள்-தங்கையை போலீசார் கைது செய்தனர்.
மதுவுக்கு எதிரான போராட்டம்
மதுரை கே.புதூர் காந்திபுரம் பாண்டியன்நகரை சேர்ந்தவர் குணா. இவருடைய மனைவி நந்தினி (வயது 29). இவர் மதுவுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளார்.
இந்தநிலையில் நந்தினியும், அவரது தங்கையுமான நிரஞ்சனாவும் (24) ஈரோடு பஸ் நிலையத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கருத்துகள் அச்சிடப்பட்ட நோட்டீசுகளை வினியோகம் செய்வதாக ஈரோடு டவுன் போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது நந்தினியும், நிரஞ்சனாவும் அங்கிருந்த பொதுக்களிடம் நோட்டீசு வழங்கி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை நோட்டீசு வினியோகம் செய்ய போலீசார் அனுமதி அளிக்கவில்லை. ஆனால் அவர்கள் தடையை மீறி நோட்டீசு வழங்கினார்கள். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்கள். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
கைது
நந்தினியும், நிரஞ்சனாவும் மத்திய, மாநில அரசுகளுக்கும், பிரதமர் நரேந்திரமோடிக்கும் எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது அவர்கள் போலீஸ் காரில் ஏறுவதற்கு மறுப்பு தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பொதுமக்களும் பலர் திரண்டனர். இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் குண்டுக்கட்டாக தூக்கி காரில் ஏற்றி ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஈரோடு பஸ் நிலையத்தில் மதுரையை சேர்ந்த நந்தினி தனது தங்கையுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.