எதிர்க்கட்சிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது-அமைச்சர் பெரிய கருப்பன் குற்றச்சாட்டு

பா.ஜ.க.விற்கு எதிரான கருத்துக்களை கொண்ட எதிர்க்கட்சிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது என அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.

Update: 2023-07-17 18:45 GMT

பா.ஜ.க.விற்கு எதிரான கருத்துக்களை கொண்ட எதிர்க்கட்சிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது என அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.

அமலாக்கத்துறை

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் சிவகங்கையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜ.க. தனக்கு எதிரான கருத்துக்கள் கொண்ட எதிர்க்கட்சியினரை மிரட்டுவதற்காக அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது. பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற உள்ள நேரத்தில் இந்த சோதனை நடவடிக்கையை எடுத்துள்ளனர். இதற்கு உறுதியாக மக்கள் வருகிற தேர்தலில் பதில் தருவார்கள். தக்காளி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து மாநிலங்களிலுமே தக்காளி விலை உயர்ந்து உள்ளது.

ஆனால் தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கையால் முதலில் பண்ணை பசுமை கடைகளில் கொள்முதல் விலைக்கே தக்காளி வழங்கப்பட்டது. இதைெதாடர்ந்து 110 ரேஷன் கடைகளில் தக்காளி குறைந்த விலைக்கு வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் மேலும் 90 கடைகளில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிவாரணம்

மேலும் உணவு வழங்கல் துறை கட்டுப்பாட்டில் உள்ள அமுதம் அங்காடிகள், பல்வேறு ரேஷன் கடைகளில் படிப்படியாக விரிவுபடுத்தப்பட உள்ளது. பிரதமருக்கு இந்திய மக்கள் மீது அக்கறை கிடையாது. அவர் வெளிநாட்டு சுற்றுலாக்களில் தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்.

ரேஷன் கடைகளில் பணியாளர்கள் நியமனம் தொடர்பாக ஏற்கனவே 38 மாவட்டங்களில் நேர்காணலுக்கு வந்துள்ளனர். அவர்களின் சான்றிதழ் சரி பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சிலர் பதவி உயர்வு கேட்டு நீதிமன்றத்தை நாடினர். அவர்களுக்கும் உரிய நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது நீதிமன்றத்தின் அனுமதியின் பெயரில் 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தொடர்ந்து அந்தந்த பகுதி மண்டல இணை பதிவாளர்கள் மூலம் சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின்னர் நியமனங்கள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்