பெங்களூரு ஆசிரமத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

11 பேர் மாயமானதாக எழுந்த புகாரை தொடர்ந்து பெங்களூரு ஆசிரமத்தில் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காணாமல் போனவர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டனர்.

Update: 2023-02-24 18:45 GMT

விழுப்புரம்:

விக்கிரவாண்டி அருகே குண்டலப்புலியூரில் உள்ள அன்புஜோதி ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்றோர் என சுமார் 150 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இங்கிருந்து கடந்த 6.12.2021 அன்று கருணைப்பயணம் என்ற பெயரில் 53 பேரை அழைத்துக்கொண்டு ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபியின் நண்பர் ஆட்டோ ராஜாவுக்கு சொந்தமான பெங்களூரு அருகே தொட்டக்குப்பியில் உள்ள ஆசிரமத்தில் சேர்த்துள்ளனர். இதில் 11 பேர், கடந்த 4.3.2022 அன்று தப்பிச் சென்று விட்டதாக அங்குள்ள ஆசிரமத்தினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் எங்கு சென்றார்கள், என்ன ஆனார்கள் என்பது குறித்து தெரியவில்லை.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

இது தொடர்பாக விசாரிப்பதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் 7 பேர் கொண்ட குழுவினர் நேற்று விழுப்புரத்தில் இருந்து பெங்களூருவுக்கு விரைந்தனர். அவர்கள் பெங்களூரு தொட்டக்குப்பி பகுதியில் உள்ள ஜூபின்பேபியின் நண்பரான ஆட்டோ ராஜாவுக்கு சொந்தமான ஆசிரமத்திற்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விழுப்புரம் குண்டலப்புலியூர் அன்புஜோதி ஆசிரமத்தில் இருந்து விட்டுச்சென்ற 53 பேரில் தற்போது பெங்களூரு ஆசிரமத்தில் எத்தனை பேர் உள்ளனர், 11 பேர் எவ்வாறு தப்பிச்சென்றனர், அவர்களை பற்றி உள்ளூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதா? என்பது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதோடு சில சட்டப்பூர்வமான ஆவணங்களை கைப்பற்றியும் விசாரித்து வருகின்றனர்.

புகைப்படங்கள் வெளியீடு

இதனிடையே அன்புஜோதி ஆசிரமத்தில் இருந்து காணாமல் போனதாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் விரிவாக்க தெருவில் வசித்து வந்த ஜாபருல்லா (வயது 70), தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே களப்பாக்குளம் பாரதியார் நகரை சேர்ந்த சிவசங்கரனின் மனைவி லட்சுமியம்மாள் (80), அவரது மகன் முத்துவிநாயகம் (48), மரக்காணம் அருகே பிரம்மதேசத்தை சேர்ந்த காளிதாஸ் (60), புதுச்சேரி தட்சிணாமூர்த்தி நகரை சேர்ந்த நடராஜன் (48) ஆகிய 5 பேர் பற்றிய தகவல் மட்டுமே உள்ளது. மற்றவர்கள் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. எனவே முதற்கட்டமாக ஜாபருல்லா உள்ளிட்டோரின் புகைப்படங்களுடன் அவர்களது வயது, முழு முகவரி, உடல் அமைப்பு, உயரம், காணாமல்போன அன்று அணிந்திருந்த உடைகள், அவர்களது நிறம், அவர்கள் உடல் அமைப்பில் என்னென்ன குறைபாடு உடையவர்கள் என்பன போன்ற விவரங்களுடன் சுவரொட்டிகள் அச்சடித்து அவற்றை விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் அந்தந்த உள்ளூர் போலீசாரின் உதவியுடன் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், கடை வீதிகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஒட்டி அவர்களை தேடி வருகின்றனர். இதுதவிர அவர்களின் சுய விவரங்களை வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட பல சமூகவலைத்தளங்களிலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

மேலும் இவர்களை பற்றிய தகவல் ஏதேனும் தெரிந்தால் உடனடியாக 94981 69000, 94981 44205 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். அல்லது விழுப்புரம் வண்டிமேட்டில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தை நேரில் அணுகலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

விழுப்புரம் குண்டலப்புலியூர் ஆசிரம விவகாரம் தொடர்பாக அதன் நிர்வாகி ஜூபின்பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், மேலாளர் கேரளாவை சேர்ந்த பிஜூமோகன், பணியாளர்களான நாரசிங்கனூரை சேர்ந்த அய்யப்பன், பெரியதச்சூர் விநாயகபுரத்தை சேர்ந்த கோபிநாத், தென்காசி முத்துமாரி, விழுப்புரம் அயினம்பாளையத்தை சேர்ந்த பூபாலன், தெலுங்கானாவை சேர்ந்த சதீஷ், கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த தாஸ் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஜூபின்பேபி, மரியா ஜூபின் ஆகிய இருவரும் விழுப்புரம் வேடம்பட்டில் உள்ள சிறையிலும், பிஜூமோகன் உள்ளிட்ட 6 பேர் கடலூர் சிறையிலும் உள்ளனர். தாஸ் மட்டும் பிணையில் உள்ளார். இவர்களில் தாசை தவிர மற்ற 8 பேரை காவலில் எடுத்து விசாரிக்க விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனுதாக்கல் செய்துள்ளனர். இம்மனு இன்று (சனிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது. இதற்காக அவர்கள் 8 பேரையும், சிறையில் இருந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் அழைத்து வந்து விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்