கடைமடை பகுதிக்கு காவிரி நீர் வந்தது
கடைமடை பகுதிக்கு காவிரி நீர் வந்தது.
நாகை மாவட்டத்தில் கடைமடை பகுதிக்கு காவிரி நீர் வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
டெல்டாவின் நீர் ஆதாரம்
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் விவசாய பணிகளுக்கு தேவையான நீர் ஆதாரமாக மேட்டூர் அணை உள்ளது. இங்கிருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு கடந்த மாதம் (ஜூன்) 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்ட பகுதிகளுக்கு தண்ணீர் செல்லும் வகையில் கல்லணையில் இருந்து தண்ணீர், காவிரி, வெண்ணாறு, வெட்டாறு, கொள்ளிடம், புது ஆறு (கல்லணைக்கால்வாய்) ஆகிய ஆறுகளில் பிரித்து விடப்பட்டது.
கடைமடை பகுதி
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தின் கடைமடை பகுதிக்கு பாசனம் தரும் ஆறுகளாக வளப்பாறு, புத்தாறு, அரசலாறு, முடிகொண்டானாறு, திருமலைராஜன் ஆறு, நரிமணியாறு உள்ளிட்ட ஆறுகள் உள்ளன.
இந்த ஆறுகள் மூலம் 13 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடி நடந்து வருகிறது. மேட்டூர் அணை திறக்கப்பட்டு 20 நாட்களுக்கு மேலாகி விட்ட நிலையில் திருமருகல் கடைமடை பகுதிக்கு காவிரி நீர் எப்போது வரும் என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
காவிரி நீர் வந்தது
திருமருகல் கடைமடை பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் வடிகால் வாய்க்கால்களை தூர்வாரி உடைந்த மதகுகளை சீரமைத்து விவசாய பணிகளுக்கு தேவையான தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் கடைமடை பகுதியில் உள்ள ஆறுகளுக்கு நேற்று முன்தினம் காவிரி நீர் வந்தடைந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.