தூத்துக்குடியில் 2 பேரிடம் பிடிபட்ட வாக்கி டாக்கியை சோதனை நடத்த சென்னை ஆய்வகத்துக்கு அனுப்ப போலீசார் நடவடிக்கை

தூத்துக்குடியில் 2 பேரிடம் பிடிபட்ட வாக்கி டாக்கியை சோதனை நடத்த சென்னை ஆய்வகத்துக்கு அனுப்ப போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Update: 2022-11-11 18:45 GMT

தூத்துக்குடியில் 2பேரிடம் பிடிபட்ட வாக்கிடாக்கியை பரிசோதனைக்காக சென்னை ஆய்வகத்துக்கு அனுப்ப போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வாக்கி டாக்கி

தூத்துக்குடி சிவந்தாகுளம் ரோட்டில் சந்தேகப்படும்படியாக நின்ற 2 பேரை தூத்துக்குடி கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா தலைமையிலான போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்கள் தேங்காய் ஏற்றுமதியாளரான தூத்துக்குடி வி.இ.ரோட்டை சேர்ந்த செல்வக்குமார் (வயது 66), சண்முகபுரத்தை சேர்ந்த அகஸ்டின் தேன்ராஜ் (54) என்பது தெரியவந்தது. இவர்கள் வைத்து இருந்த 3 பாக்கெட்டுகளை போலீசார் கைப்பற்றி சோதனை செய்தபோது, அதில் கற்கண்டு போன்ற துண்டுகளாக படிகாரம் இருந்தது. இதனை கிறிஸ்டல் மெத்தம் பீட்டாமைன் போதைபொருள் என்று ஏமாற்றி விற்பனை செய்வதற்காக வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அவர்கள் வைத்து இருந்த ஜீப்பில் வாக்கி டாக்கி பொருத்தப்பட்டு இருந்தது. அந்த வாக்கி டாக்கியில் போலீஸ் அலைவரிசை இணைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கியூ பிரிவு போலீசார் 2 பேரையும் தென்பாகம் போலீசில் ஒப்படைத்தனர். அதன்பேரில் தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜாராம் விசாரணை நடத்தி வருகிறார்.

பரிசோதனை

பிடிபட்ட வாக்கி டாக்கியில் மாவட்ட போலீஸ் துறையின் அலைவரிசை தொடர்பு கொள்ளப்பட்டதால், போலீசார் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். போலீஸ் துறையில் உள்ள தொழில்நுட்ப பிரிவு மூலம் வாக்கி டாக்கிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் போலீசாருக்கான சேனலுடன் வாக்கி டாக்கியை இணைத்தால் மட்டுமே அந்த வாக்கி டாக்கியில் இருந்து போலீஸ் துறையின் அலைவரிசையில் தொடர்பு கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. இதனால் பிடிபட்ட வாக்கி டாக்கி, போலீஸ் துறையுடன் இணைக்கப்பட்டு உள்ளதா, இதன் மூலம் போலீஸ் தகவல்கள் ஒட்டு கேட்கப்பட்டு உள்ளதா என்பதை கண்டறிவதற்காக தொழில்நுட்ப பிரிவு போலீசாரிடம் வாக்கி டாக்கிகள் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. இந்த 2 வாக்கி டாக்கிகளும் சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அந்த ஆய்வு அறிக்கை கிடைத்த பிறகே தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும் போலீஸ் அலைவரிசையுடன் தனியார் வாக்கிடாக்கி தொடர்பு கொண்டு இருப்பதில், போலீசார் யாரேனும் சம்பந்தப்பட்டு உள்ளார்களா என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் வழக்கு விசாரணை சூடுபிடித்து உள்ளது.

-

Tags:    

மேலும் செய்திகள்