நவீன தகன மேடை அமைப்பதால் சாதி பாகுபாடு மறையும்--மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து
நவீன தகன மேடை அமைப்பதால் சாதி பாகுபாடு மறையும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.;
புதுக்கோட்டை மாவட்டம், தொட்டியம்பட்டி கிராமத்தை சேர்ந்த பாண்டியன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில்,
எங்கள் கிராமத்தில் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தொட்டியம்பட்டி கிராம பஞ்சாயத்தில் ஏற்கனவே மயானம் உள்ளது. இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு தனித்தனியாக மயானம் உள்ளன.
இந்த நிலையில் பொன்னமராவதி டவுன் பஞ்சாயத்துக்காக, எரிவாயு தகனம் மையம் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.
பொன்னமராவதி டவுன் பஞ்சாயத்துக்குள் போதிய இடம் இருந்தும், எங்கள் கிராம பஞ்சாயத்துக்குள் எரிவாயு தகன மையம் அமைக்க முடிவு செய்து உள்ளனர். இது ஏற்புடையதல்ல.
எனவே புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள, தொட்டியம்பட்டி கிராமத்தில் எரிவாயு தகன மையம் அமைக்க தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், இது போன்ற நவீன தொழில்நுட்பத்தால் எரிவாயு தகன மேடை அமைக்கப்படும்போது, ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு மயானம் என்ற பாகுபாடு காணாமல் போய்விடும். இது போன்ற பாகுபாடுகளை நீக்க நவீன தொழில்நுட்பம் பயன்படுகிறது. ஒருவர் இறந்த பிறகாவது சாதி பாகுபாடு இல்லாமல் இருந்தால் நல்லது என கருத்து தெரிவித்தனர். பின்னர் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.