விசுவ இந்து பரிஷத் பேரணிக்கு அனுமதி கேட்ட வழக்கு - அரசு தரப்பு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
விசுவ இந்து பரிஷத் பேரணிக்கு அனுமதி கேட்ட வழக்கில் அரசு தரப்பு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது
திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பரத், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், விரதத்தின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விசுவ இந்து பரிஷத் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்த உள்ளோம்.
அதன்படி வருகிற 1-ந்தேதி திருச்சி மலைக்கோட்டையில் தொடங்கி சமயபுரம், சுவாமிமலை, திருத்துறைப்பூண்டி, ராமநாதபுரம், திருமங்கலம், உசிலம்பட்டி, பொள்ளாச்சி, திண்டுக்கல் வழியாக விராலிமலையில் ஜனவரி 17-ந்தேதி நிறைவு செய்வது என முடிவு செய்து உள்ளோம். ஜீப்பில் முருகன் சிலையை வைத்து இந்த பேரணி நடக்கிறது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்து உள்ளனர். அந்த உத்தரவை ரத்து செய்து, பேரணி செல்ல அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி மஞ்சுளா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கு குறித்து அரசு தரப்பில் பதில் அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 2-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.