புஞ்சைபுளியம்பட்டியில் பப்ஜி விளையாட்டால் மாணவன் தற்கொலை செய்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்
புஞ்சைபுளியம்பட்டியில் பப்ஜி விளையாட்டால் மாணவன் தற்கொலை செய்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் சடையப்ப தேவர் வீதியை சேர்ந்தவர் கந்தவேல் (வயது 48). இவருடைய மனைவி ரமா பிரபா (41). இவர்களுடைய மகன் அருண் (16). கந்தவேல் சென்னை வண்டலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றியதால், அவர் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தார். மகன் அருண், சென்னையில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். கொரோனா பரவல் காரணமாக ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி கள்ளிப்பாளையத்தில் உள்ள அவரது நண்பரது பண்ணை வீட்டில் கந்தவேல் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
அங்கு மாணவன் அருண் அவருடைய ஸ்மார்ட் போனில் பப்ஜி விளையாட்டினை பதிவிறக்கம் செய்து தொடா்ந்து விளையாடி வந்தார். இதனால், மனநிலை பாதித்து, கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26-ந் தேதி வீட்டில் தூக்குபோட்டு அருண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புளியம்பட்டி போலீசார் தற்கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில், இந்த வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.