சுய உதவிக்குழுக்களுக்கு பசுக்கள் வழங்கப்பட்ட வழக்கு:பழனி கோசாலையில் மாடுகளின் நிலை குறித்து ஆராய ஆணையம்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

பழனி கோசாலையில் மாடுகளின் நிலை குறித்து ஆராய வக்கீல் ஆணையம் அமைத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-08-22 21:12 GMT


பழனி கோசாலையில் மாடுகளின் நிலை குறித்து ஆராய வக்கீல் ஆணையம் அமைத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

கோசாலை

பழனியை சேர்ந்த ராமசாமி என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் பொருட்களையும், நிலங்களையும் நன்கொடையாக வழங்கி வருகின்றனர். ஒருசிலர் பசு மாடுகளையும் காணிக்கையாக கொடுக்கின்றனர். பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் பசுக்கள் கோவிலுக்கு சொந்தமான 220 ஏக்கர் இடத்தில் உள்ள கோ சாலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த பசுக்களை பாதுகாக்கவும், பராமரிக்கவும் பணியாளர்கள், மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், பழனி கோசாலையில் 17 மாடுகள் போதிய உணவு மற்றும் தீவனமின்றி இறந்துள்ளதாக கோவில் இணை கமிஷனர் தெரிவித்துள்ளார். மேலும் பழனி முருகன் கோவில் கோ சாலையில் பல்வேறு முறைகேடு நடைபெறுகிறது. எனவே பசுக்களின் நிலை குறித்த உண்மையை வெளிப்படுத்தவும், மீதமுள்ள பசுக்களின் உயிரை காப்பாற்றவும் வக்கீல் ஆணையம் அமைத்து ஆய்வு செய்ய வேண்டும், கோ சாலை தொடர்பாக உரிய உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் ஆணையர்

இந்த மனு நீதிபதிகள் சுந்தர், பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கோ சாலையில் உள்ள மாடுகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள மாடுகள் அதிகமானதால் 218 மாடுகள் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது என அரசு தரப்பு வக்கீல் அறிக்கை தாக்கல் செய்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சுய உதவிக்குழுக்களுக்கு எதன் அடிப்படையில் காணிக்கையாக வந்த மாடுகள் வழங்கப்பட்டன என கேள்வியெழுப்பினர். மேலும், ஒரு கோ சாலையில் மாடுகள் அதிகமானால் மற்ற கோ சாலைக்கு தான் அனுப்ப வேண்டும் என விதிகள் உள்ளது. எனவே, சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட பசுக்களின் நிலை குறித்து அறிய வக்கீல் ஆணையர் ஒருவரை நியமனம் செய்தும், அடுத்த மாதம் 14-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். அதேபோல, மனுதாரர் இந்த வழக்கில் அரசியல் சாயம் பூச கூடாது எனவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்