பின்வாசல் வழியாக பக்தர்களை அழைத்துச்சென்ற 28 பேர் மீது வழக்கு
பின்வாசல் வழியாக பக்தர்களை அழைத்துச்சென்ற 28 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சமயபுரம்:
சமயபுரம் மாரியம்மன் கோவிலை சுற்றித்திரிந்த இடைத்தரகர்கள் சிலர், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பக்தர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு பின்வாசல் வழியாக கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர். இதை தடுத்த தனியார் பாதுகாப்பு நிறுவன அதிகாரி ஆறுமுகத்தை தாக்கியதாக மாகாளிகுடியைச் சேர்ந்த தணிகைவேல்(வயது 44), சந்தோஷ்(23) ஆகியோரை போலீசார், சமயபுரம் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் கல்யாணி நேற்று சமயபுரம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், கோவிலை சுற்றித்திரியும் இடைத்தரகர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து கோவிலின் பின்வாசல் வழியாக பக்தர்களை அழைத்து சென்றதாக சமயபுரம், மாகாளிகுடி, மருதூர், வி.துறையூர், சமயபுரம் அண்ணா நகர் பகுதிகளை சேர்ந்த சுமார் 28 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களைத் தேடி வருகின்றனர்.