ரூ.22¼ லட்சத்தை மோசடி செய்த மேற்பார்வையாளர் மீது வழக்கு

கோர்ட்டு உத்தரவின் பேரில், தனியார் கம்பெனியில் ரூ.22¼ லட்சத்தை மோசடி செய்த மேற்பார்வையாளர் மீது விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2022-11-08 18:15 GMT

தனியார் கம்பெனி

விராலிமலை அருகே அம்பாள் நகரை சேர்ந்தவர் ராமையா மகன் கொண்டையா (வயது 28). இவர் கடந்த 2017-ம் ஆண்டு முதல் அதே பகுதியில் தனியார் கம்பெனி நடத்தி வந்துள்ளார். அந்த கம்பெனியில் திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே செவலூரை சேர்ந்த அம்சத் இப்ராஹிம் மகன் கமல் பாட்ஷா என்பவர் 2018-ம் ஆண்டு முதல் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.

அப்போது கொண்டையாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் கமல் பாட்ஷாவிடம் பொறுப்புகள் மற்றும் வரவு, செலவு கணக்குகளை பார்த்துக் கொள்ளும்படி ஒப்படைத்துள்ளார். மேலும் வங்கி பரிமாற்றத்திற்காக தனது வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் அதன் கடவுச்சொல் ஆகியவற்றையும் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.

மோசடி

அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கமல் பாட்ஷா நெட் பாங்கிங் மூலமாக ரூ.22 லட்சத்து 32 ஆயிரத்து 700-ஐ கையாடல் செய்து விட்டதாகவும், அதற்காக நெட் பேங்கிங், பின் நம்பர் செல்போன் சிம் கார்டு ஆகியவற்றை தவறாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாகவும் கூறி கொண்டையா இலுப்பூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

வழக்கு

இந்த வழக்கை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டி விராலிமலை போலீஸ் நிலையத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்பேரில், விராலிமலை போலீசார் கமல் பாட்ஷா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்