தனியார் கல்லூரி பேராசிரியர் மீது வழக்கு

பி.எச்டி. மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனியார் கல்லூரி பேராசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-08-23 20:30 GMT


கோவை


பி.எச்டி. மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனியார் கல்லூரி பேராசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


பாலியல் தொல்லை


கோவை மலுமிச்சம்பட்டியை சேர்ந்த 35 வயது வாலிபர் துடியலூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-


நான் துடியலூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எச்டி. (ஆராய்ச்சி படிப்பு) முழு நேரமாக படித்து வருகிறேன். நான் படிக்கும் கல்லூரியில் வேலை பார்த்து வரும் பேராசிரியர் மதன்சங்கர் (வயது 50) என்பவர் நான் உணவு அறை, கழிவறைக்கு செல்லும்போது பின்தொடர்ந்து வந்து அந்தரங்க பகுதிகளில் தொட்டு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார்.


படிப்பு சம்பந்தமாக கருத்தரங்குகளுக்கு செல்லும்போது கூட நான் ஆண் என்று தெரிந்தும் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். இதனால் மனவேதனை அடைந்த நான் பலமுறை எச்சரித்தும் அவர் கேட்கவில்லை. அவரது தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


பேராசிரியர் மீது வழக்கு


பேராசிரியரின் இந்த செயலால் எனக்கு மிகுந்த மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. என்னால் தொடர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் கல்லூரிக்கு செல்லவே எனக்கு அச்சமாக உள்ளது.


எனவே எனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வரும் பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.


இந்த புகாரின் பேரில், துடியலூர் போலீசார் தனியார் கல்லூரி பேராசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவையில் பி.எச்டி. மாணவருக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்