பா.ஜனதா மாவட்ட தலைவர் மீது வழக்கு
மதுரையில் சர்ச்சை பேச்சு பேசியதாக பா.ஜனதா மாவட்ட தலைவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
மணிப்பூர் கவர்னர் இல.கணேசன் குணம் அடைய வேண்டி மதுரை சிலைமான் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கல்லம்பல் பகுதியில் உள்ள கோவிலில் பா.ஜ.க. சார்பில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பா.ஜ.க. மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் மகா.சுசீந்திரன் பேசுகையில், இந்து மதத்தையும், கடவுள்களையும் அசிங்கமாக பேசுபவர்களின் உடலில் நாக்கு இருக்காது என்று சர்ச்சையாக பேசியதாக கூறப்படுகிறது..
இதுகுறித்து சிலைமான் போலீசார் விசாரணை நடத்தி, மகா.சுசீந்திரன் மீது, பொது இடத்தில் அவமரியாதையாக பேசியது, சட்டம்-ஒழுங்கு, அமைதிக்கு குந்தகம் விளைவித்தது, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பேசியது, தொண்டர்களை வன்முறைக்கு தூண்டியது உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.