அமைச்சர் மீதான வழக்கு - ஐகோர்ட்டு பதிவாளர் அறிக்கை
தலைமை நீதிபதியின் முன் அனுமதி இல்லாமல் தானாக முன்வந்து தனி நீதிபதி வழக்கு பதிவு செய்தார் என சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழக்கைத் தாமாக முன்வந்து வழக்கைப் பட்டியலிட்டு விசாரித்து வருகிறார்.
இந்த சூழலில் தன் மீதான வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரிப்பதற்கு தடைகோரி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஹெச் ராய் மற்றும் பி.கே.மிஸ்ரா ஆகியோர் அமர்வு விசாரித்து வருகிறது.
விசாரணையின் போது, "அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தொடர்பான வழக்கைச் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெற்று தான், தனி நீதிபதி தாமாக முன்வந்து விசாரித்து வருகிறாரா..? அல்லது தன்னிச்சையாக விசாரிக்கிறாரா..? என்பது குறித்து சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் அதுசார்ந்த விவரங்கள் கூடிய அறிக்கையை வரும் திங்கட்கிழமைக்குள் சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் எம். ஜோதிராமன் தரப்பிலிருந்து ஒரு அறிக்கை சுப்ரீக்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், "தமிழ்நாட்டின் அமைச்சர்கள் மீதான வழக்குகளைத் தாமாக முன்வந்து விசாரணை நடத்துவதற்கு முன் அனுமதி கோரி தனி நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் 21.8.2023 அன்று கடிதம் எழுதி இருந்தார். ஆனால் அந்த கடிதத்தை 23.8.2023 அன்று பதிவாளர் அலுவலகம் தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்தது. இருப்பினும் பின்னர் அந்த கடிதத்தை 31.8.2023 அன்று தலைமை நீதிபதி பார்த்து விட்டார். ஆனால் அதே நேரத்தில் முன் அனுமதி கடிதத்தைத் தலைமை நீதிபதி பார்ப்பதற்கு முன்பாகவே தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தனது வழக்கின் விசாரணையைத் தொடங்கிவிட்டார்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.