பா.ஜனதாவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து வழக்கு: ஐகோர்ட்டு அதிரடி
தாமரையை அரசியல் சின்னமாக ஒதுக்கியது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தவறாகும் என்று ஐகோர்ட்டில் வாதிடப்பட்டது.;
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், அகிம்சை சோசலிச கட்சியின் நிறுவன தலைவரான ரமேஷ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "பா.ஜனதாவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய மலரான தாமரையை ஒரு அரசியல் கட்சியின் சின்னமாக ஒதுக்கியது அநீதி ஆகும். இது நாட்டின் ஒருமைப்பாட்டை இழிவுபடுத்துவது போல உள்ளது. அதனால், பா.ஜனதாவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்ய வேண்டும் என்று செப்டம்பர் மாதம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, என் மனுவை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், "தாமரை தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாநில அரசுகளும், தாமரையை மாநில சின்னமாக அறிவித்துள்ளன. அதனால், தாமரையை அரசியல் சின்னமாக ஒதுக்கியது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தவறாகும்'' என்று வாதிடப்பட்டது. இதையடுத்து, இந்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.