பெண் உள்பட 4 பேர் மீது வழக்கு
பெண் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
களக்காடு:
களக்காடு கக்கன்நகர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சாமிக்கண் மகன் வேல்முருகன் (வயது 31). இவர் கேரளாவில் தங்கியிருந்து டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 11.3.2023 அன்று வீட்டில் இருந்த 4 பவுன் தங்கசங்கிலி, 3 கிராம் தங்க மோதிரம் ஆகியவற்றை காணவில்லை. இதுகுறித்து வேல்முருகனுக்கு அவரது தாயார் போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து வேல்முருகன் தனது மனைவி முத்தழகுவிடம் (23) கேட்ட போது தெரியாது என்று கூறி விட்டார். இதனால் சந்தேகமடைந்த வேல்முருகன் தொடர்ந்து விசாரித்த போது, முத்தழகு தனது சகோதரி சென்னை பெருங்களத்தூரை சேர்ந்த சரவணபெருமாள் மனைவி முத்துலெட்சுமி (28) கூறியதின் பேரில், கேசவநேரியை சேர்ந்த கணேசனின் மகன்கள் லெட்சுமணன் (30), சுரேஷ் (40) ஆகியோர்களிடம் தங்க நகைகளை கொடுத்து மோசடி செய்தது தெரியவந்தது.
இதையறிந்த வேல்முருகன் இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் முத்தழகு, முத்துலெட்சுமி, லெட்சுமணன், சுரேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.