118 நிறுவனங்கள் மீது வழக்கு
சுதந்திர தினத்தில் விடுமுறை அளிக்காத 118 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் சுதந்திர தினவிழாவையொட்டி தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் ரமேஷ் மேற்பார்வையில், உதவி ஆணையர் கிருஷ்ணவேணி தலைமையில், உதவி ஆய்வாளர்கள் அன்பழகன், முருகானந்தம் மற்றும் அதிகாரிகள் நேற்று மாவட்டம் முழுவதும் 138 தொழிற்சாலைகளில் ஆய்வு செய்தனர். இதில், பல்வேறு தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு சுதந்திர தினத்தில் விடுமுறை அளிக்காமல் பணியில் ஈடுபடுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சேலம், ஆத்தூர், மேட்டூர், ஓமலூர் உள்பட மாவட்டத்தில் 71 ஓட்டல்கள், 37 கடைகள், 10 மோட்டார் வாகன தொழிற்சாலைகள் என மொத்தம் 118 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட தொழிற் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.