சேலத்தில்போலி உயில் தயாரித்து ரூ.20 கோடி சொத்துகள் மோசடி5 பேர் மீது வழக்கு
சேலம்
சேலத்தில் போலி உயில் தயாரித்து ரூ.20 கோடி மோசடி செய்த 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
போலீஸ் சூப்பிரண்டிடம் மனு
சேலம் குகை பகுதியை சேர்ந்தவர் வனிதா. இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமாரை சந்தித்து மனு ஒன்று கொடுத்தார்.
அதில் கூறி இருப்பதாவது:-
என்னுடைய தந்தையான சதாசிவத்துக்கு சங்ககிரி உள்பட 25-க்கும் மேற்பட்ட இடங்களில் அசையும் மற்றும் அசையா சொத்துகள் உள்ளன. இந்த சொத்துக்கு நான் உள்பட 3 சகோதரிகளும், திருமுருகராஜ் என்ற தம்பியும் சரிசம பங்குதாரர் ஆவார்கள். எனது தந்தை கடந்த 2016-ம் ஆண்டு இறந்து விட்டார். இதையடுத்து சொத்துகளை பாகப்பிரிவினை செய்ய முயற்சிக்கும் போது எல்லாம் எனது தம்பி திருமுருகராஜ், அவருடைய மனைவி உமா மகேஸ்வரி ஆகியோர் பெண்களுக்கு சொத்தில் பங்கு இல்லை என்று கூறி மறுத்து வந்தனர்.
இந்த நிலையில் எங்களுக்கு சேர வேண்டிய சொத்துகளை அபகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் திருமுருகராஜ், தனது தந்தை பெயரில் உள்ள சொத்துகளை கடந்த 2012-ம் ஆண்டே தனக்கு உயில் எழுதி வைத்துள்ளதாக கூறுகிறார். மேலும் போலியான உயில் தயாரித்து ஏமாற்றி உள்ளார். எனவே தம்பி, அவருடைய மனைவி மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த ராஜா சண்முகம், முருகன், நடேசன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தார்.
வழக்குப்பதிவு
இதுதொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு இளமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் செந்தாமரை செல்வி ஆகியோர் விசாரணை நடத்தினர்.
இதில் சதாசிவம் இறப்பதற்கு முன்பு யாருடைய பெயரிலும் உயில் ஏதும் எழுதி வைக்கவில்லை எனவும், திருமுருகராஜ் போலி ஆவணம் மூலம் உயில் எழுதி ரூ.20 கோடிக்கு மேற்பட்ட சொத்துகளை மோசடி செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து திருமுருகராஜ், உமா மகேஸ்வரி, ராஜா சண்முகம், முருகன், நடேசன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.