வணிக வரித்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு
வணிக வரித்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் நாராயணசாமி. இவருடைய நிறுவனத்துக்கு தேவையான காகித பண்டல்களை சென்னையில் உள்ள நிறுவனத்திடமிருந்து வாங்கி உள்ளார். பின்னர், அதனை லாரி மூலமாக தூத்துக்குடிக்கு எடுத்து சென்றார். அப்போது மதுரை பாண்டிகோவில் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் வணிக வரித்துறை அதிகாரிகள் சோதனைக்காக லாரியை நிறுத்தினர். ஆவணங்களை சோதித்த போது காகித பண்டல்களுக்கான ஆன்லைன் ஆவணங்களின் தேதி தவறாக பதிவாகியுள்ளது. இதனால் வணிக வரித்துறை அதிகாரிகள், ஆவணங்களில் தேதி சரியாக குறிப்பிடப்படாததால் அபராதம் விதிக்க வேண்டும் என்றும் அபராதம் விதிக்காமல் இருக்க வேண்டுமென்றால் ரூ.20 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. லாரி டிரைவர் சரவணன், உரிமையாளர் நாராயணசாமியை தொடர்புகொண்டு இதுகுறித்து தெரிவித்தார். அவர், ஆவணங்களில் தேதி தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், சரியான ஆவணங்களை அனுப்பி வைப்பதாகவும் கூறினார். இதற்கிடையே வணிக வரித்துறை அதிகாரிகள், லஞ்சத்தொகையை பாதியாக குறைத்து ரூ.10 ஆயிரம் தந்து விட்டால் லாரியை விடுவிப்பதாக கூறினராம். டிரைவர் சரவணன் ரூ.5 ஆயிரத்தை கொடுத்து மீதித்தொகையை தூத்துக்குடி சென்று அனுப்பி வைப்பதாகவும் கூறினார். அதன்படி அந்த பணத்தை பெற்றுக்கொண்டு அதிகாரிகள் லாரியை விடுவித்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் லாரி டிரைவர் சரவணன், வணிகவரித்துறை அதிகாரிகள் லஞ்சம் கேட்டு பேரம் பேசியது, ரூ.5 ஆயிரம் கொடுத்தது உள்ளிட்ட அனைத்தையும் தனது செல்போனில் பதிவு செய்து உரிமையாளரிடம் அளித்துள்ளார். மேலும், மதுரை லஞ்ச ஒழிப்புத்துறையினரிடமும் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தி மதுரை ஜெய்ஹிந்த்புரம் சரக மாநில வரி அலுவலராக பணிபுரியும் சசிகலா, மதுரை வணிக வரித்துறை அலுவலகத்தில் மாநில துணை வரி அலுவலராக பணிபுரியும் கணேசன், மாநில துணை வரி அலுவலர் பாலகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.