ஆ.ராசாவின் கருத்தை கண்டித்த பா.ஜனதா நிர்வாகிகள் மீது பொய் வழக்கு

ஆ.ராசாவின் கருத்தை கண்டித்த பா.ஜனதா நிர்வாகிகள் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருவதாக மதுரையில் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.

Update: 2022-09-21 21:23 GMT


ஆ.ராசாவின் கருத்தை கண்டித்த பா.ஜனதா நிர்வாகிகள் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருவதாக மதுரையில் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.

அண்ணாமலை பேட்டி

மதுரையில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை ேநற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. எம்.பி. ஆ. ராசாவின் கருத்துக்கு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், அனைத்து தரப்பு மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள் கூட எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

அவருக்கு இந்த சர்ச்சை பேச்சு புதிதல்ல. தி.மு.க.வில் இருப்பவர்கள் 2 வருடத்திற்கு ஒரு முறை இதுபோன்று பேசுவது வழக்கம்தான். மக்களின் எதிர்ப்பை அவர்களே சம்பாதித்து வருகிறார்கள்.

பொய் வழக்குகள்

ஒவ்வொரு மேடையிலும் ஆ.ராசா மக்களிடம் அவமதிப்பை பெறும் வகையிலேயே பேசி வருகிறார். சர்ச்சையான புதுப்புது கருத்துகளை பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

ஆ.ராசாவின் பேச்சை கண்டித்த பா.ஜ.க. நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் அவர்கள் மீது பொய் வழக்குகளும் போடப்பட்டு உள்ளன. ஆ.ராசாவின் கருத்து சரிதான் என்று, அந்த கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் யாரும் கூறவில்லை. ஆ.ராசாவுக்கு எதிராக மக்கள், கையெழுத்து இயக்கம் தொடங்கி இருக்கிறார்கள்.

20 லட்சம் பேருக்குமேல் இந்த கையெழுத்து இயக்கத்தில் பங்கெடுத்து உள்ளனர். இதனை கவர்னர், ஜனாதிபதி ஆகியோருக்கு கொண்டு செல்வோம். இதுபோல், ஆ.ராசா மீது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் புகார் கொடுத்து வருகின்றனர்.

அரசியல் லாபம்

சர்ச்சை கருத்துகளை இனியும் பேசினால், இந்துக்கள் உள்பட எந்த ஒரு மதத்தினரும் தி.மு.க.விற்கு வாக்களிக்க மாட்டார்கள். அரசியல் லாபத்திற்காக இதுபோன்று பேசி வருகிறார். இதனை கண்டிக்கிறோம்.

விநாயகர் சதுர்த்திக்கு முதல்- அமைச்சர் வாழ்த்துகூற மறுக்கிறார். ஆனால், ஓணம் பண்டிகைக்கு அதிகாலையிலேயே வாழ்த்து கூறுகிறார். பா.ஜனதா அவ்வாறு கிடையாது. எல்லா விழாக்களுக்கும் வாழ்த்து தெரிவிக்கும். இதில் இருந்து மத அரசியலை செய்வது பா.ஜ.க. அல்ல, தி.மு.க.தான் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். குழப்பமான சித்தாந்தத்திற்குள் தி.மு.க. கூடுகட்டி வாழ்கிறது.

நம்பர் ஒன் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் என அவர்களே கூறுகிறார்கள். தமிழகம் கல்வியில் முதல் மாநிலமாக இருந்தது. ஆனால், தற்போது அப்படி இல்லை. போதை பொருட்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில், பிரதமர் மோடி மதுரையில் போட்டியிட்டால் மிகப்பெரிய வெற்றி பெறுவார். அது மதுரை மட்டுமின்றி தமிழக மக்களுக்கு பெருமையான விஷயம். பா.ஜனதாவில் பொறுப்பானவர்களுக்கு பதவிகள் வழங்கப்படும்.

ராகுல்காந்தி

ராகுல்காந்தியின் நடைபயணம், எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. கட்சியில் இருந்து மாறி செல்பவர்கள் பறவைகள் போன்றவர்கள். அவர்கள் எங்கு சென்றாலும் இங்கு வந்துவிடுவார்கள்.

கச்சத்தீவை தாரை வார்த்தது ஏன் என்று தெரியவில்லை. இதனால்தான் மீனவர் பிரச்சினை வருகிறது. கச்சத்தீவு பிரச்சினை தீர்ந்தால்தான் மீனவர் பிரச்சினையை தீர்க்க முடியும். கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பதில் பா.ஜனதா முழு மூச்சாக போராடி வருகிறது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை

2025-ம் ஆண்டிற்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மற்ற மருத்துவமனைக்கும் இந்த மருத்துவமனைக்கும் வித்தியாசம் இருக்கிறது.

அதிக படுக்கை வசதி, அதிக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வசதி ஏற்படுத்தப்படும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை வைத்து தி.மு.க. அரசியல் செய்கிறது என்பது மக்களுக்கே தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, மாநில பொது செயலாளர் பேராசிரியர் சீனிவாசன், மாநில கலாசார பிரிவு துணை தலைவர் பாண்டியன், மாநகர் மாவட்ட தலைவர் மகாசுசீந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்